| ADDED : ஆக 07, 2024 01:04 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி கதிர்வேல்நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், 41, என்பவர், திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தென்காசிக்கு அரசு பஸ்சில் பயணம் செய்தார். டிக்கெட் தொகை 51 ரூபாய் என கூறிய நடத்துனரிடம், 200 ரூபாய் கொடுத்து மீதி தொகை 149 ரூபாயை கேட்டார். சில்லறை இல்லை என கூறிய நடத்துனர், சிறிது நேரம் கழித்து பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறினார்.ஆனால், பாக்கித் தொகையை கொடுக்காமல் நடத்துனர், பஸ்சில் இருந்து சதீஷ்குமாரை இறக்கி விட்டார். இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழகத்திற்கு வாட்ஸாப் மூலம் சதீஷ்குமார் புகார் அளித்தார்.இதையடுத்து, துாத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சதீஷ்குமார் வழக்கு தொடர்ந்தார். ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.சதீஷ்குமாருக்கு பாக்கித் தொகை 149 ரூபாய், மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை 5,000 ரூபாய், வழக்கு செலவுத் தொகை 5,000 ரூபாய் என மொத்தம் 10,149 ரூபாயை வழங்க வேண்டும் என அவர்கள் உத்தரவிட்டனர்.