| ADDED : ஜூன் 06, 2024 06:58 PM
துாத்துக்குடி:விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பிரியா, 43. இவர், குடும்பத்துடன் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு நேற்று முன்தினம் வந்தார். சுவாமி தரிசனத்துக்கு முன், பிரியா மற்றும் உறவினர்கள் கடலில் புனித நீராடினர். அப்போது, பிரியா கழுத்தில் அணிந்திருந்த, 2 சவரன் தங்கச் செயின் கடலில் தவறி விழுந்தது. இதுகுறித்து, கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களிடம் அவர் தெரிவித்தார். கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் கடலுக்குள் இறங்கி தேடினர்.சிறிது நேரத்தில், 2 சவரன் தங்க செயின் கடலில் கண்டெடுக்கப்பட்டது. அந்த செயினை கோவில் உதவி பாதுகாப்பு அதிகாரி ராமச்சந்திரனிடம் அவர்கள் ஒப்படைத்தனர். இதையடுத்து, செயினை தவறவிட்ட பிரியாவிடம் ராமச்சந்திரன் ஒப்படைத்தார்.இதுகுறித்து பிரியா கூறியதாவது:கடலில் மாயமான செயின் கிடைக்காது என நினைத்தோம். கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் தேடியதில் கிடைத்தது. அந்த செயினை நான் கழுத்தில் அணிந்திருந்த போட்டோவை காண்பித்து, அதை உறுதி செய்த பிறகே, செயினை என்னிடம் வழங்கினர். நகையை பத்திரமாக மீட்டு கொடுத்ததற்காக கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள், அதிகாரிகளுக்கு நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.