| ADDED : மே 26, 2024 12:25 AM
துாத்துக்குடி:திருச்செந்துார் கோவில் கடற்கரையில் வழக்கம்போல பரபரப்புடன் காணப்பட்டது. அப்போது, அய்யா கோவில் பகுதியில், ஒருவர் மது அருந்திவிட்டு, திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதையெடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர்.மேலும், திருச்செந்துார் தாலுகா போலீசார் அங்கு சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருச்செந்துார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் துாத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.இந்த சம்பவம் குறித்து திருச்செந்துார் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரையில், உடலில் தீ வைத்தவர் திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள கடங்கநேரி பகுதியைச் சேர்ந்த விவசாயி மாதவன், 52 என தெரியவந்தது.இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:தீக்குளித்த மாதவன் கடற்கரையில் மதிய உணவு சாப்பிட்டு உள்ளார். பின்னர், பாட்டிலில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை திடீரென உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அங்கிருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.மாதவன் தற்கொலைக்கு முயன்ற காரணம் தெரியவில்லை. அவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். தொடர்ந்து, விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.