உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / உள்ளாட்சி தேர்தலுக்கு முன் கடலோர பஞ்சாயத்து முதல்வருக்கு மீனவர் சங்கம் திடீர் வேண்டுகோள்

உள்ளாட்சி தேர்தலுக்கு முன் கடலோர பஞ்சாயத்து முதல்வருக்கு மீனவர் சங்கம் திடீர் வேண்டுகோள்

துாத்துக்குடி:அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய தலைவர் அன்டன் கோமஸ் முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட 16 பாரம்பரிய மீனவ சமுதாயங்களின் ஜனத்தொகை சுமார் 1.3 கோடி. மீனவர்களுக்காக தனி தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற வேணுகோபால் கமிஷன் பரிந்துரையும், மீனவர்களை பழங்குடி பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற மண்டல் கமிஷன் பரிந்துரையும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.பழங்குடி பட்டியல் கோரிக்கை தேர்தல் அறிக்கையில் வந்தாலும், அரசின் செயலில் மௌனமே தொடர்கிறது. மீனவ சமூகம், ஆட்சியில், அரசியலில் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு, நீதி கேட்க நாதியற்ற சமூகமாக இருந்து வருகிறது. இதே நிலை தமிழகம் முழுவதும் உள்ளாட்சியிலும் தொடர்வது விவரிக்க முடியாத கொடூரம்.ஜனத்தொகை அதிகமுள்ள மீனவ கிராமங்கள், மிகச்சிறிய ஜனத்தொகையுள்ள சமவெளி கிராம பஞ்சாயத்துகளுடன் அல்லது அருகில் உள்ள நகராட்சிகளுடன் இணைத்துள்ள சதி தொடர்கிறது. உதாரணமாக, திருநெல்வேலி மாவட்டத்தில், ராதாபுரம் தாலுகாவில் கூட்டப்புளி சமவெளி லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்தில் உள்ளது.பெருமணல் சமவெளி செட்டிகுளம் பஞ்சாயத்திலும், பஞ்சல் சமவெளி இருக்கந்துறை பஞ்சாயத்திலும், இடிந்தகரை சமவெளி விஜயாபதி பஞ்சாயத்திலும், கூட்டனை, கூடுதாழை, பெரியதாழையின் தென்பகுதியான ஜார்ஜியார்நகர், மிக்கேல் நகர் ஆகியவை சமவெளி குட்டம் பஞ்சாயத்திலும் உள்ளன.துாத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கடற்கரை, கல்லாமொழி ஆகியவை குலசேகரன்பட்டிணம் பஞ்சாயத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நூறு சதவிகித மீனவர்களை கொண்டுள்ள ராஜாக்கமங்களம் துறை, ராஜாக்கமங்களம் என்ற தேர்வுநிலை ஊராட்சியில் உள்ளன. இதனால் மீனவர்கள் கிராம ஊராட்சி, ஒன்றிய, மாவட்ட பஞ்சாயத்துகளில் தலைவராகும், உறுப்பினராகும் அடிப்படை ஜனநாயக பிரதிநிதித்துவம் மறுக்கப்படுகிறது, பறிக்கப்படுகிறது. கடலோர கிராம பகுதிகளுக்கான திட்டங்களுக்கு, பேரிடர் நிவாரணங்களுக்கு ஒதுக்கப்படும் அரசு நிதிகள் திசை திருப்பப்படுகிறது.தமிழக அரசின் உள்ளாட்சி துறை ஆய்வு செய்து, சமமான ஜனத்தொகையில், மீனவ பகுதிகளை பிரித்து, மீனவர் பிரதிநித்துவம் தவிர்க்கப்படாமல் ஜனத்தொகையின் அடிப்படையில், அனைத்து பிரிவுகளுக்கும் உரிய பிரதிநித்துவம் அமையும் வகையில் நகராட்சி வார்டுகள் மறுசீராய்வு செய்ய வேண்டும்.தமிழகம் முழுவதும் மீனவர் நலன், ஜனநாயக உரிமை காக்க, கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து கடலோர பஞ்சாயத்து (Coastal panchayat) அமைக்க, அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை