| ADDED : மே 29, 2024 09:03 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் சாலையம் தெருவைச் சேர்ந்தவர் சிவலிங்கம், 50. பெயின்டர். இவருக்கு விளாத்திக்குளம் சிதம்பர நகரில் 3.4 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்துக்கு பட்டா கேட்டு, மே 2ல் ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார். 25 நாட்களைக் கடந்தும் விண்ணப்பம் நிலுவையில் இருந்ததால், விண்ணப்பத்தை பரிசீலிக்க, சர்வேயர் செல்வமாடசாமியை, 41 அணுகினார். விண்ணப்பத்தை பரிசீலிக்க 4,000 ரூபாய் வேண்டும் என சர்வேயர் செல்வமாடசாமி கேட்டார். 3,000 தருவதற்கு சிவலிங்கம் சம்மதித்தார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவலிங்கம், துாத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., பீட்டர் பால்துரையிடம் புகார் தெரிவித்தார். அவரது அறிவுரையின்படி, ரசாயன பவுடர் தடவிய பணத்தை, நேற்று மதியம் விளாத்திக்குளம் அருகே சர்வேயர் செல்வமாடசாமியிடம் சிவலிங்கம் கொடுத்தார்.அங்கு, சாதாரண உடையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், செல்வமாடசாமியை கைது செய்தனர். தொடர்ந்து அவரை விளாத்திக்குளம் தாசில்தார் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.