| ADDED : ஜூலை 20, 2024 09:35 AM
துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகேயுள்ள மெஞ்ஞானபுரத்தில் புதிதாக துவங்க உள்ள கரும்பு சாறு விற்பனை கடை ஒன்றில் வைத்துள்ள விளம்பர பதாகையின் படம், பத்திரிகைகளில் வேகமாக பரவி வருகிறது. அந்த பேனரில், கரும்புச்சாறு கடைக்கு வேலைக்கு ஆள் தேவை. சம்பளம் 18000 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.வேலை நேரம் காலை 8:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு இன்ஜி., - பி.ஏ., - பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தவர்களும், 25 முதல் 40 வயது வரையுள்ளவர்கள் அணுகலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, கடை உரிமையாளர் சாம்ராஜ் கூறியதாவது:படித்தவர்களை வேலைக்கு வைத்தால் வாடிக்கையாளர்களை நல்ல முறையில் உபசரிப்பர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளேன். எம்.ஏ., - எம்.எஸ்சி., படித்தவர்களுக்கு இரண்டாயிரம் அதிகம் வழங்கவும் முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.