| ADDED : நவ 22, 2025 12:17 AM
விளாத்திகுளம்: டிராக்டரில் இருந்து தவறி விழுந்த 3 வயது சிறுவன் உயிரிழந்தார். துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே எம். துரைசாமிபுரம் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் -- மாரீஸ்வரி தம்பதியின் மகன் நிதின் கிருஷ்ணன், 3. நேற்று முன்தினம் நுாறு நாள் வேலைக்குச் சென்ற போது, மாரீஸ்வரி தன் மகன் நிதின் கிருஷ்ணனை உடன் அழைத்து சென்றார். மரக்கன்றுகள் நடுவதற்காக பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், 23, என்பவர் மரக்கன்றுகளை டிராக்டரில் கொண்டு வந்தார். அந்த டிராக்டரில் நிதின் கிருஷ்ணனை அமர வைத்து விட்டு மாரீஸ்வரி தனது வேலையை பார்க்கச் சென்றார். டிரைவர் செல்வம் அதை கவனிக்காமல் திடீரென டிராக்டரை இயக்கியதால், தவறி கீழே விழுந்த நிதின் கிருஷ்ணன் மீது டிராக்டரின் டயர் ஏறியதில் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அந்த குழந்தையை மீட்டு, புதுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு துாக்கிச் சென்றனர். ஆனால், வழியிலேயே சிறுவன் நிதின் கிருஷ்ணன் உயிரிழந்தார். டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் செல்வத்திடம் விசாரிக்கின்றனர்.