| ADDED : ஜூலை 05, 2024 11:06 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த களஞ்சியம் மகன் மாரிசெல்வம், 24, என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் கடந்த 21ம் தேதி தகராறு ஏற்பட்டது.அன்றையதினம் இரவு வெளியே சென்ற மாரிசெல்வம் வீடு திரும்பவில்லை. அவரை கண்டுபிடித்துத் தர, அவரது சகோதரி மாரீஸ்வரி, தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின், கலெக்டர் அலுவலகத்தில் அவரது தாய் கணேஷ்வரி மனு அளித்தார்.இதற்கிடையே, மாரிசெல்வத்துடன் தகராறில் ஈடுபட்டவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மாரிசெல்வம் கொலை செய்யப்பட்டு, லுார்தம்மாள்புரம் பகுதியில் முட்புதரில் புதைக்கப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, மாரிசெல்வத்தின் உடலை போலீசார் நேற்று தோண்டி எடுத்தனர்.பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.மாரிசெல்வம் கொலை தொடர்பாக, சிறார்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.போலீசார் கூறியதாவது:மாரிசெல்வத்தை இளம்சிறார்கள் சிலர், மதுகுடிக்க லுார்தம்மாள்புரம் பகுதியில், ஆள்நடமாட்டம்இல்லாத, கோட்டை சுவர் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அவரது கால், கைகளில் வெட்டியதோடு, சங்கிலியால் கழுத்தை நெரித்தனர்.பின், அங்கு தோண்டி வைக்கப்பட்டிருந்த குழியில் மாரிசெல்வத்தை உயிரோடு புதைத்து விட்டு, அனைவரும் தப்பி விட்டனர். தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.