திருச்செந்துார் கோவில் ராஜகோபுரத்தில் அமெரிக்க தொழில்நுட்ப இடிதாங்கி அமைப்பு
துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பக்தர்களின் வசதிக்காக கோவிலில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாக பணி நடந்து வருகிறது. வரும் ஜூலை மாதம் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக கோவில் ராஜகோபுரத்தில் உள்ள கலசங்கள், கோவில் பிரகாரங்கள், வெளிப்புற தரைத்தளங்கள், விடுதிகள் உள்பட பல்வேறு சீரமைப்பு பணி நடந்து வருகிறது. ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களை பாதுகாப்பதற்காக அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இடிதாங்கி அகற்றப்பட்டு புதிதாக இரண்டு இடி தாங்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.கடந்த காலங்களில் கோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த இடிதாங்கி இரும்பால் செய்யப்பட்டிருந்தது. தற்போது அமைக்கப்பட்டுள்ள இடிதாங்கி மிகவும் தரமான காப்பரால் உருவாக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த தொடர் மழையின் போது தஞ்சாவூர் பெரிய கோவில் ராஜகோபுரத்தில் இடி தாக்கி கோபுர கலசம் சேதமடைந்தது.இதையடுத்து தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் உள்ள ராஜகோபுரங்களில் அதிநவீன இடிதாங்கி பொருத்த அறநிலையத்துறை உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் திருச்செந்துார் கோவிலிலும், ராஜகோபுரத்திலும் அதிநவீன இடி தாங்கி பொருத்தப்பட்டது.அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:137 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தில் கலசங்கள் பொருத்தப்பட்டுள்ள இடத்தின் இருபுறமும் இந்த இடிதாங்கி அமைக்கப்பட்டுள்ளது. 11 அடி உயரம் கொண்ட இடிதாங்கி 2.50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த இடிதாங்கி தமிழக கோவில்களில் முதன் முறையாக திருச்செந்துாரில் அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தை சுற்றி சுமார் 40 மீட்டர் சுற்றளவுக்கு பாதுகாப்பு அளிக்கக் கூடியது. இவ்வாறு அவர்கள் கூறினர்.