கூட்டுறவு வங்கிகளில் கடன் மறுப்பு கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம், கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டம் துவங்கியதும், பயிர் காப்பீட்டுத் தொகை சரியாக வழங்கப்படவில்லை; இதுவரை விடுவிக்கப்பட்ட தொகை குறித்த முழு விபரம் இல்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.விவசாயிகள் பலர், மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு எந்த வித கடனும் வழங்கப்படுவதில்லை என குற்றம்சாட்டினர். கூட்டுறவுவங்கி செயலர், அதிகாரிகளை அடிக்கடி இடமாற்றம் செய்வதால் கடன் பெறுவதில் சிரமம் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.தேவையற்ற இடமாற்றம், புதிய பதவிக்கு நியமிக்கப்பட்டவர்கள் பணிக்கு வராதது போன்ற காரணங்களால் விவசாயிகளை வேண்டுமென்றே கூட்டுறவுத் துறை அதிகாரிகள் அலைக்கழித்து வருகின்றனர். சில வங்கிகளில் வாரத்துக்கு ஒரு அதிகாரி இடமாற்றம் செய்யும் நிலை உள்ளதை, கலெக்டர் விசாரித்து நல்ல தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் பலர் பேசினர்.அப்போது குறுக்கிட்ட கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகள், 'விவசாயிகளுக்கு தடையின்றி கடன் வழங்கப்படுகிறது' என்றனர். அதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதுதொடர்பாக கூட்டுறவுத் துறை பதிவாளரிடம் பேசி, உரிய தீர்வு காண்பதாக கலெக்டர் இளம்பகவத் தெரிவித்ததை தொடர்ந்து விவசாயிகள் அமைதியாகினர்.