திருச்செந்துார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வரிசையை ஒழுங்குபடுத்த நடவடிக்கை என்ன; உயர்நீதிமன்றம் கேள்வி
மதுரை: குருவாயூர், திருப்பதி கோயில்களில் உள்ளதுபோல் திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இரும்பு மேம்பாலம் அமைத்து பக்தர்களின் வரிசையை ஒழுங்குபடுத்த முடியுமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கோயில் நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.திருச்செந்துார் சிவசுப்பிரமணிய பட்டர் உட்பட 11 பேர் தாக்கல் செய்த மனு: அறநிலையத்துறை கமிஷனர், திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கோயில் செயல் அலுவலர் 2004 மற்றும் 2005ல் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் அக்கோயிலில் அர்ச்சனை, ஆராதனை, பூஜை உள்ளிட்ட கைங்கரியங்களில் எங்கள் குடும்பத்தினரை அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: இவ்வழக்கு திருச்செந்துார் கோயில் பட்டர்கள், திரிசுதந்திரர்களுக்கு இடையிலான பிரச்னை தொடர்பானது. இதனால் பக்தர்கள் நலனை பாதிக்கும் பல பிரச்னைகள் எழுந்துள்ளன. கீழ்கண்ட கேள்விகளை இந்நீதிமன்றம் எழுப்புகிறது. குருவாயூர், திருப்பதி கோயில்களில் உள்ளதுபோல் திருச்செந்துார் கோயிலில் இரும்பு மேம்பாலம் அமைத்து பக்தர்களின் வரிசையை ஒழுங்குபடுத்த முடியுமா, தற்போதுள்ள ஏற்பாடுகளால் கடிகாரம் சுற்றும் திசையில் பக்தர்கள் செல்ல முடியாது என்பது உண்மையா, வி.ஐ.பி.,-வி.வி.ஐ.பி., தரிசனங்களை அனுமதிப்பதால், பொதுவான பக்தர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டுமா, கோயில் நிர்வாகம் வி.ஐ.பி.,- வி.வி.ஐ.பி.,தரிசனத்திற்கு தனி நேரம் ஒதுக்க விரும்புகிறதா, உண்மையெனில் இதை தவிர்க்க கோயில் நிர்வாகம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, வி.ஐ.பி.,கள் தரிசனத்தின்போது பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்படுவதால், வி.ஐ.பி., தரிசனத்திற்காக பக்தர்களின் வரிசை நிறுத்தப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடு செய்ய முடியுமா, கோயிலுக்கு வரும் பக்தர்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க, பக்தர் களுக்கு சிரமம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய தனி திட்டம் வகுப்பது தொடர்பாக கோயில் நிர்வாகம் ஆலோசித்துள்ளதா. பக்தர்கள் வரிசை நகர்வு தடைபடாத வகையில் இலைகளில் விபூதி உள்ளிட்ட பிரசாதம் வினியோகிக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதா, தற்போது கோயில் உட்பிரகாரத்தில் பிரசாதம் வினியோகம் செய்யப்படுகிறதா, திரிசுதந்திரர்கள், பட்டர்கள், ஸ்தானிகர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் உள்ளதா, கோயிலில் இவர்களின் முறை வராதபோது, வரிசையை கடந்து இவர்கள் பக்தர்களை அழைத்துச் செல்ல அனுமதிப்பதில்லை என்பதை உறுதி செய்ய திட்டம் உள்ளதா, போதிய கழிப்பறை வசதிகள் உள்ளதா என்பதற்கு கோயில் நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.