| ADDED : நவ 18, 2025 07:24 AM
துாத்துக்குடி: குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாலிபரை தவறுதலாக விடுவித்த போலீசார், மறுநாளே அவரை வீடு தேடிச் சென்று கைது செய்து, மீண்டும் சிறையில் அடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துாத்துக்குடி, கிருபா நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ராகுல், 25. இவர் மீது, புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டது. போக்சோ வழக்கில் ராகுலை கடந்த மார்ச் 9ல் போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின் அவர், பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். ராகுல் மீது வேறு வழக்குகள் இருந்ததால், மார்ச் 28ல் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. சிறையில் இருந்த ராகுல் ஜாமின் கேட்டு, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நவ., 15ல் ராகுலுக்கு ஜாமின் கிடைத்து விட்டதாக, பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து பேரூரணி சிறை அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் கிடைப்பதற்குள், பேரூரணி சிறையிலிருந்து ராகுலை சிறைத்துறை போலீசார் விடுவித்தனர். இதற்கிடையே, மறுநாள் ஆவணங்கள் கையில் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பேரூரணி சிறை அதிகாரிகள், பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது தான், ராகுலுக்கு நீதிமன்றத்தில் ஜாமின் கிடைக்கவில்லை என்ற தகவல் தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த பேரூரணி சிறையில் உள்ள போலீசார், உடனடியாக ராகுலின் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த ராகுலிடம், தவறாக விடுவித்து விட்டதாக கூறி, அவரை மறுபடியும் சிறைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம், சிறைத்து றை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைத்துறை அதிகாரிகளிடம், ராகுல் வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து பேசியவர் யார்? அந்த தொலைபேசி அழைப்பு உண்மை தானா என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.