ஆணவ கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை பெற மறுத்து உறவினர்கள் மறியல்
துாத்துக்குடி; ஆணவ கொலை செய்யப்பட்ட பட்டியலின வாலிபரின் உறவினர்கள் மறியிலில் ஈடுபட்டதால், துாத்துக்குடி --- திருச்செந்துார் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் கவின் செல்வ கணேஷ், 27; சென்னை ஐ.டி., நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் பாளையங்கோட்டையில் அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, கே.டி.சி., நகரை சேர்ந்த காவல் துறையில் எஸ்.ஐ.,க்களாக பணிபுரியும் சரவணன் --- கிருஷ்ணகுமாரி தம்பதியின் மகன் சுர்ஜித், 24, என்பவரை போலீசார் கைது செய்தனர். தன் சகோதரியுடன் கவின் நெருங்கி பழகி வந்த ஆத்திரத்தில், அவரை கொலை செய்ததாக, போலீசாரிடம் சுர்ஜித் கூறியுள்ளார். பட்டியலின சமூகத்தை சேர்ந்த கவின், மாற்று சமூகத்தை சேர்ந்த சுர்ஜித் என்பவரால் கொலை செய்யப்பட்டதால், இது ஆணவ கொலை எனக்கூறி, அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, சுர்ஜித் பெற்றோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கவினின் சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் அவரது வீட்டின் முன் உறவினர்கள் நேற்று திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் துாத்துக்குடி --- திருச்செந்துார் சாலையில் உள்ள முக்காணி ரவுண்டானாவில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு நடத்தினர். கொலையாளி சுர்ஜித்தின் தாய் மற்றும் தந்தை இருவரையும் 24 மணி நேரத்தில் கைது செய்வோம் என, போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்தனர். இதனால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 5 கி.மீ., தொலைவிற்கு சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்தன.
கொலையாளி பெற்றோர் மீது
வழக்கு
க வின் கொலையை தொடர்ந்து, திருநெல்வேலி மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்து, சுர்ஜித்தை கைது செய்தனர். நேற்று காலை அவரை திருநெல்வேலி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 15 நாள் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, கவின் தாய் தமிழ்ச்செல்வி போலீசில் அளித்த புகாரில், 'கொலைக்கு சுர்ஜித்தின் பெற்றோர் சரவணன் - கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கும் தொடர்புள்ளது' என, தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவரது பெற்றோர் மீதும் ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.