உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மாநகராட்சி ரோட்டோரம் இனி மண் தேங்காது உடனே அள்ள நவீன மண் எடுக்கும் இயந்திரம் வந்தாச்சு

மாநகராட்சி ரோட்டோரம் இனி மண் தேங்காது உடனே அள்ள நவீன மண் எடுக்கும் இயந்திரம் வந்தாச்சு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தேங்கும் மணலை அகற்றுவதற்கு 18 லட்ச ரூபாய் செலவில் சேன்ட் ஸ்வீப்பிங் மார்டன் மிஷின் டில்லியில் இருந்து வந்துள்ளது. மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த மிஷின் ஓரிரு நாளில் பணியை துவக்க உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியை குப்பை இல்லா நகரமாக மாற்றும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை மாநகராட்சி கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரடி மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டபுள்யூ.ஜி.சி ரோடு மற்றும் வி.இ ரோடு ஆகிய இரண்டு இடங்களிலும் மதியம் 2 மணிக்கு ஒரு முறை, குப்பை அள்ளும் முறை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பணிகள் என்ன அளவில் நடக்கிறது என்பதை கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இன்ஜினியர் ராஜகோபாலன் மற்றும் அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இதனையும் மீறி கடைக்கு வெளியே குப்பையை ரோட்டில் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த புதிய திட்டத்தின் மூலம் முக்கிய இரண்டு ரோடுகளில் குப்பைகள் இல்லாமல் நல்ல நிலையில் இருந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ரோட்டின் ஓரமாக அடிக்கடி பல இடங்களில் மணல் குவிந்து விடுவதால் இருசக்கர வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. மாநகராட்சி சார்பில் சுகாதார பணியாளர்களை வைத்து அடிக்கடி அதனை அள்ளினாலும் தொடர்ந்து இந்த பணி யை செய்ய முடியாத நிலையில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு தொடர்ந்து சிரமமும், இதனால் விபத்துக்களும் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மாநகராட்சி சார்பில் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் மணல் எடுப்பதற்கு நவீன மிஷின் வாங்க முடிவு செய்யப்பட்டது. மொத்தம் 18 லட்ச ரூபாய் செலவில் 'சேன்ட் ஸ்வீப்பிங் மார்டன் மிஷின்' என்னும் நவீன மணல் அள்ளும் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. ரோட்டில் உள்ள மணலை நொடிப் பொழுதில் எடுத்து விடும் தன்மை கொண்ட இந்த நவீன இயந்திரம் டில்லியில் இருந்து நேற்று முன்தினம் தூத்துக்குடி மாநகராட்சிக்கு வந்தது. மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட இந்த இயந்திரத்தை மாநகராட்சி கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார். இன்ஜினியர் ராஜகோபாலன், இள நிலை பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.மாநகராட்சி பகுதியில் உள்ள ரோடுகளின் ஓரமாக மணல் குவிந்து கிடக்கிறது. தொடர்ச்சியாக இந்த மிஷினை தினமும் சுழற்சி முறையில் இயக்கி மணலை அப்புறப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக இந்த இயந்திரத்தை துவக்கி வைப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுகிறது. இதனால் இன்றோ, நாளையோ மண் எடுக்கும் இயந்திரம் மாநகராட்சி பகுதியில் தனது பணியை ஆரம்பித்து விடும் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை