| ADDED : செப் 13, 2011 11:53 PM
தூத்துக்குடி : தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் 7 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கும் பணியினை கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்குமாறு அவர் உத்தரவிட்டார். தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் சுமார் 500க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் உள்ளன. இங்கு இருந்து தினமும் நூற்றுக்கணக்கான டன் மீன்கள் பிடிக்கப்பட்டு வருகிறது. மீன்களை கையாளும் முறைகளை நவீனப்படுத்தி வெளிநாட்டிற்கு ஹைஜீனிக்காக அனுப்ப வேண்டும் என்றும், இதற்காக ஏராளமான நிதி உதவியை மத்திய, மாநில அரசுகள் அளிக்க தயாராக உள்ளது. இதற்காக மீன்பிடி கடல் பகுதிகள் நவீனப்படுத்தப்பட்டும், மீனவர்களுக்கு மீன்களை நவீன முறையில் கையாளுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் ஒரு கட்டமாக தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதி தற்போது மணல் பாங்கான இடத்தில் அமைந்துள்ளது. இதனால் பிடிக்கப்படும் மீன்கள் மணலில் கொட்டி தான் ஏலம் விடும் நிலை இருந்தது. இதனால் இந்த வகை மீன்களை மீண்டும் சுத்தம் செய்து வெளியிடங்களுக்கு அனுப்பும் நிலை இருந்து வருகிறது. அத்துடன் படகுகளை நிறுத்தி வைப்பதற்கும் போதிய வசதி இல்லாத நிலையும் திரேஸ்புரத்தில் இருந்து வந்தது. இந் நிலையை போக்க தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் 6 கோடியே 85 லட்ச ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படுகிறது. இதற்காக தற்போது மணல் பாங்கான கடல் பகுதி முழுவதும் கான்கிரீட் தளம் 320 மீட்டர் நீளத்திற்கு போடப்படுகிறது.
கடல் பகுதியில் 52 மீட்டருக்கு கட்டி அமைக்கப்படுகிறது. இது தவிர நவீன ஏலக்கூடம், பவர் ரூம் போன்றவையும் அமைக்கப்படுகிறது. மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படுவதால் படகுகள் இனிமேல் பிரச்னை இல்லாமல் கடல் பகுதியில் பாதுகாப்பான முறையில் நிறுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்றும், காற்று காலங்களில் ஒன்றோடு ஒன்று படகு மோதி சேதம் ஏற்படுவது போன்றவையும் இனிமேல் இருக்காது என்று கூறப்படுகிறது. மீன்பிடி இறங்குதளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டிருப்பதை தொடர்ந்து நேற்று கலெக்டர் ஆஷீஷ்குமார் இதனை ஆய்வு செய்தார். மாநகராட்சி கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மீன்துறை உதவி இயக்குநர் (கடல்வளம்) பிரதீப்குமார், மீன்துறை செயற்பொறியாளர் மலையரசன், உதவி பொறியாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
பணிகள் நடக்கும் விபரத்தை மீன்துறை அதிகாரிகள் கலெக்டரிடம் முழுமையாக விளக்கினர். பின்னர் கலெக்டர் ஆஷீஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது; திரேஸ்புரம் மீனவ மக்களுக்கு தமிழக அரசின் சிறப்பான திட்டமாக மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படுகிறது. இங்குள்ள மீனவர்களுக்கு இது மிகவும் பெரிய அளவிலான பயனை அளிக்கும். இந்த பணியினை 2012ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படும். இங்கு சேரும் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு மீனவ சங்கங்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் கீழவைப்பார், வேம்பார், தருவைகுளம் உள்ளிட்ட இடங்களில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திட்டம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.