| ADDED : ஆக 03, 2011 12:08 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலை நடத்திட 25 லட்ச ரூபாய் உத்தேசமாக செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனை பொதுநிதியில் இருந்து செலவு செய்து கொள்ள நாளை நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. ஒரு கோடியே 20 லட்ச ரூபாய் செலவில் வல்லநாட்டில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் பைப்லைன்களில் உடைப்பு உள்ள பகுதியை மாற்றவும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் நாளை (4ம் தேதி) வியாழக்கிழமை காலை 11 மணிக்கு மேயர் கஸ்தூரிதங்கம் தலைமையில் நடக்கிறது. கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இன்ஜினியர் ராஜகோபாலன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய தேவையான குடிநீர் மூன்று எண்ணம் பைப் லைன்களில் வல்லநாடு தலைமை பணியிடத்தில் இருந்து ராஜாஜி பூங்கா நீரேற்றும் நிலையத்திற்கு வந்து சேர்கிறது. இங்கு வரும் நீர் அளவை சரியான முறையில் அளவிட தேவையான வாட்டர் ப்ளோ மீட்டர் எந்த ஒரு பைப் லைன்களிலும் இல்லை. ராஜாஜி பூங்காவிற்கு வரும் குடிநீர் 5 பிரிவுகளாக பிரிந்து தரைமட்ட நீர்தேக்கத் தொட்டியில் விழுகிறது. இந்த ஐந்து பைப் லைன்களிலும் வாட்டர் ப்ளோ மீட்டர் பொறுத்தப்பட வேண்டும். அதற்கு உத்தேசமாக 10 லட்சத்து 50 ஆயிரம் செலவாகும் அதற்கு அனுமதி கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.
தூத்துக்குடி மாநகராட்சியின் பழைய எல்கை பகுதியுடன் புதியதாக தூத்துக்குடி ரூரல், சங்கரப்பேரி, மீளவிட்டான், முத்தையாபுரம், அத்திமரப்பட்டி ஆகிய ஐந்து ஊராட்சிகளின் எல்கைகளை இணைத்து ஒருங்கிணைக்கப்பட்ட மாநகராட்சி பகுதிகளின்படி 2011 உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதனால் தேர்தல் தொடர்பான பணிகளுக்கு உத்தேச செலவினம் 25 லட்சம் ஆகும் என்பதால் இந்த செலவினத்தை மாநகராட்சி பொதுநிதியில் இருந்து செலவு செய்ய அனுமதிகோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள மூன்று வாகனங்கள் அடிக்கடி பழுதாவதால் அதனை கண்டம் செய்து, புதிய மாநகராட்சி எல்லை விரிவதால் புதியதாக 2 வாகனம் வாங்குவதற்கு 40 லட்ச ரூபாய் அனுமதி கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு வல்லநாடு தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து மாநகருக்கு வரும் குடிநீர் பிரதான 2வது பைப்லைன் குழாயில் வாகைக்குளம் அருகில் 32 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள தன்னோட்ட குடிநீர் குழாயான 600 மீட்டர் ஆர்.சி.சி குழாயில் 500 மீட்டர் தூரத்திற்கு குழாய் உடைப்பு மற்றும் காலர் சேதமடைந்துள்ளதால் மாநகருக்கு வரும் குடிநீர் அளவு குறைந்து வருகிறது. பலமுறை சீரமைப்பு செய்தும் சரி செய்ய இயலாததால் மக்கள் நலன் கருதி குடிநீர் விநியோகத்தின் அவசியத்தை முன்னிட்டு சேதமடைந்த குழாய்களுக்கு பதில் புதிய குழாய் அமைக்க 40 லட்ச ரூபாய் அனுமதிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.இதே போல் புதுக்கோட்டை பாலம் அருகிலும், வாகைக்குளம் பெரியபாலம் மேற்கு பகுதியிலும் பைப்லைன் சேதமாகி விட்டதால் புதிய பைப்லைன் அமைக்க இரண்டு இடத்திற்கும் தலா 40 லட்சமும் சேர்த்து மொத்தம் மூன்று இடங்களில் ஒரு கோடியே 20 லட்சம் அனுமதிகோரும் தீர்மானம் கூட்டத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.