| ADDED : ஆக 11, 2011 02:05 AM
கோவில்பட்டி : கோவில்பட்டி வேலாயுதபுரம் பத்திரகாளியம்மன் கோயில் ஆடிப்பொங்கல் கொடியேற்று விழா நடந்தது. கோவில்பட்டி வேலாயுதபுரம் நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அண்ணா பத்திரகாளியம்மன் மற்றும் காளியம்மன் கோயில் ஆடிப்பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி கடந்த முதல் தேதியன்று வடக்கத்தி அம்மன் வணக்கத்துடன் பந்தல் கால்நடும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து நடந்த கொடியேற்ற விழாவை முன்னிட்டு உறவின்முறை அழைப்பாக சங்கத் தலைவர் செல்வமணி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மண்டகப்படிதாரர்கள், மகளிரணி, இளைஞரணியினருடன் மங்கலப் பொருட்கள் ஏந்தி யானை முன் செல்ல, மேளதாளங்கள் இசைத்து ஊர்வலமாக நடந்து வந்தனர். தொடர்ந்து நாகவிநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.இதையடுத்து கொடி மரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்களின் பக்த கோஷத்துடன் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜையும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை பூஜையுடன் அம்மன் பல்வேறு தோற்றங்களில் திருவீதியுலா வருதலும், வைரவர் பூஜையும் நடக்கிறது. மேலும் ஒவ்வொரு நாளும் மண்டபகப்படிதாரர்கள் முறையில் சிறப்பு பூஜைகளும், நிகழ்ச்சிகளும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 17ம் தேதி பொங்கலிட்டு சிறப்பு பூஜைகள் நடக்க உள்ளது.