உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்தமாதம் 3,537 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்தமாதம் 3,537 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த மாதம் 3,537 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது என்றும், தேர்தல் அமைதியான முறையில் நடப்பதற்கு அனைத்து அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் ஆஷீஷ்குமார் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் அக்டோபரில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வாக்குச்சாவடி விபரம் உள்ளிட்டவற்றை தெரிவிக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆஷீஷ்குமார் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது— தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியை பொருத்தமட்டில் 17 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 174 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 403 ஊராட்சி தலைவர்கள், 2 ஆயிரத்து 943 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சேர்த்து மொத்தம் 3 ஆயிரத்து 537 உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை தேர்வு செய்ய தேர்தல் நடக்கிறது. நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் தூத்துக்குடி மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுக்கவும், 60 மாநகராட்சி உறுப்பினரை தேர்வு செய்யவும், கோவில்பட்டி நகராட்சியில் நகராட்சி தலைவர், 36 நகராட்சி உறுப்பினர்கள், காயல்பட்டணம் நகராட்சி தலைவர், 18 உறுப்பினர்கள், 19 பேரூராட்சிகளில் 19 தலைவர்கள், 294 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க இந்த தேர்தல் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல்படி 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஆயிரத்து 749 வாக்குச்சாவடிகளும், 19 பேரூராட்சிகளுக்கு 304 வாக்குச்சாவடிகளும், தூத்துக்குடி மாநகராட்சியில் 228 வாக்குச்சாவடிகளும், கோவில்பட்டி நகராட்சியில் 67 வாக்குச்சாவடிகளும், காயல்பட்டணம் நகராட்சியில் 37 வாக்குச்சாவடிகளும் சேர்த்து மொத்தம் 2 ஆயிரத்து 385 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் மின்வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கான சாய்தளம் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் இருக்கும். ஊராட்சி ஒன்றியங்களை பொருத்தமட்டில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 166 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 16 ஆயிரத்து 547 பெண் வாக்காளர்களும் சேர்த்து மொத்தம் 6 லட்சத்து 25 ஆயிரத்து 713 வாக்காளர்கள் உள்ளனர். பேரூராட்சிகளை பொருத்தமட்டில் 79 ஆயிரத்து 178 ஆண் வாக்காளர்களும், 80 ஆயிரத்து 799 பெண் வாக்காளர்களும் சேர்த்து மொத்தம் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 977 வாக்காளர்கள் உள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சியை பொருத்தமட்டில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 556 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 646 பெண் வாக்காளர்களும் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 202 வாக்காளர்கள் உள்ளனர். கோவில்பட்டி நகராட்சியில் 27 ஆயிரத்து 236 ஆண் வாக்காளர்களும், 26 ஆயிரத்து 939 பெண் வாக்காளர்களும் சேர்த்து மொத்தம் 54 ஆயிரத்து 175 வாக்காளர்கள் உள்ளனர். காயல்பட்டணம் நகராட்சியில் 13 ஆயிரத்து 683 ஆண் வாக்காளர்களும், 14 ஆயிரத்து 630 பெண் வாக்காளர்களும் சேர்த்து மொத்தம் 28 ஆயிரத்து 313 வாக்காளர்கள் உள்ளனர். உள்ளாட்சி தேர்தலுக்கு 48 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 575 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 10 முதல் 15 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு மண்டலக்குழு என்ற வகையில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். தேர்தலுக்கு 6 ஆயிரத்து 708 வாக்குப் பெட்டிகள் பழுதுநீக்கம் செய்யப்பட்டு தயார் நிலையில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு பிரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊரக உள்ளாட்சிகளின் வாக்குச்சாவடிகளுக்கு 13 ஆயிரத்து 300 பேரும், நகர்புற உள்ளாட்சிகளின் வாக்குச்சாவடிகளுக்கு 3 ஆயிரத்து 450 பேரும் சேர்த்து மொத்தம் 16 ஆயிரத்து 750 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பிரிவுக்கு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட 500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், தூத்துக்குடி மாவட்ட பொது தேர்தல் பிரிவில் இருந்து 900 வாக்குப்பதிவு இயந்திரங்களும் சரிபார்க்கப்பட்டு நகர்புற உள்ளாட்சிகளுக்கு பிரித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் அமைதியான முறையில் எந்தவித சிறு பிரச்னைக்கும் இடமளிக்காமல் நடப்பதற்கு அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். அதிமுக., சார்பில் மாவட்ட பஞ்., தலைவர் சின்னத்துரை, திமுக., சார்பில் எஸ்.டி கணேசன், காங்., சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் ஜஸ்டின், பா.ஜ சார்பில் கனகராஜ், இந்திய கம்யுனிஸ்ட் சந்தனசேகரன், மார்க்சிஸ்ட் அர்ச்சுனன், பா.ம.க திருமலைராஜ், மாநகராட்சி கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருண்மணி, ஆர்.டி.ஓ பொற்கொடி, பொன்னியின் செல்வன், எலக்ஷன் பி.ஏ லோகநாதன், சிரஸ்தார் பழனி, பி.ஆர்.ஓ சுரேஷ், தேர்தல் பிரிவு பி.டி.ஓ லக்குவன், மாசாணம் மற்றும் அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை