உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / திமுக வேட்பாளர்களை எதிர்த்து செயல்பட்டால் தலைமையில் தெரிவித்து உடனடி நடவடிக்கை

திமுக வேட்பாளர்களை எதிர்த்து செயல்பட்டால் தலைமையில் தெரிவித்து உடனடி நடவடிக்கை

தூத்துக்குடி : திமுக தலைவர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாகவோ, அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராகவோ தேர்தல் பணி செய்தால் அவர்கள் மீது திமுக கழக சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக மிகப் பெரும் தோல்வியை சந்தித்தது. அதன் விளைவாக வந்த ஜெ.,அரசால் திமுக முன்னணி தலைவர்களை பொய் வழக்குகள் போட்டு சிறையில் தள்ளி வருகிறது. இதனால் திமுக ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி உறுப்பினர்கள், வட்டார ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு திமுக தலைவர் கருணாநிதியால் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றி வீடுகள் தோறும் திமுகவினர் சென்று திமுக அரசு மக்களுக்கு செய்த சாதனைகளை எடுத்துக் கூறி வெற்றி பெற வேண்டும் என்று திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக தலைவர் விடுத்த வேண்டுகோளை தாரகமந்திரமாக ஏற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திமுகவினர் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் போட்டியிட விருப்பமனு பலர் கொடுத்திருந்தாலும் அதில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். அந்த அடிப்படையில் இந்த முறை போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், அடுத்த முறை தங்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாய்ப்பு தருவார் என்று எண்ணி அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களின் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும். திமுக தலைவர் கருணாநிதி அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாகவோ, அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு எதிராகவோ தேர்தல் பணிகள் செய்தால் அவர்கள் மீது திமுக கழக சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுத்திட தலைமைக்கழகத்திற்கு பரிந்துரை செய்யப்படும். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் திமுக வேட்பாளர்கள் வெற்றிக்கு திமுகவினர் ஒற்றுமையுடன் பாடுபட்டு ஓயாது உழைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பெரியசாமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை