ஆத்தூர் : ஆத்தூர் பஞ்.,தேர்தலில் பல்வேறு கட்சியினரும், பிரபலமான சுயேட்சைகளும் களம் இறங்கியிருப்பதால் இங்கு கடும் போட்டி நிலவுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆத்தூர் பஞ்.,தேர்தலில் அதிமுக., திமுக., காங்., தேமுதிக., பாஜக., கம்யூ.,உட்பட்ட கட்சிகள் வேகத்துடன் களம் இறங்கியிருப்பதால் தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு விறுவிறுப்பான போட்டி நிலவுகிறது. ஆத்தூர் பஞ்.,சில் 15 வார்டுகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 6552 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3268 பேர். பெண்கள் 3284 பேர். வார்டு வாரியாக 1வது வார்டில் 610 ஓட்டுக்களும், 2வது வார்டில் 484, 3வது வார்டில் 443, 4வது வார்டில் 442, 5வது வார்டில் 446, 6வது வார்டில் 468, 7வது வார்டில் 298, 8வது வார்டில் 541, 9வது வார்டில் 231, 10வது வார்டில் 464, 11வது வார்டில் 560, 12வது வார்டில் 346, 13வது வார்டில் 375, 14வது வார்டில் 429, 15வது வார்டில் 412 வாக்காளர்களும் உள்ளனர். இதில் பலர் புதிய வாக்காளர்கள். இந்த நிலையில் தலைவர் பதவியை பொறுத்தவரை கடந்த முறை அதிமுக.,ஆழ்வை ஒன்றிய செயலாளரான ஷேக் தாவூது வெற்றி பெற்றார். அதற்கு முன் இந்திய கம்யூனிஸ்டும், முன்னதாக காங்கிரசும் பதவியிலிருந்தது.
தற்போது தலைவருக்கான களத்தில் அதிமுக.,சார்பில் ஒன்றிய பாசறை செயலாளர் அறிவுடைநம்பி பாண்டியன் நிறுத்தப்பட்டுள்ளார். மேலும் திமுக., காங்., தேமுதிக., உட்பட்ட கட்சிகளும் தங்கள் பங்குக்கு வேட்பாளர்களை தயார் செய்து வரும் நிலையில் பாஜக., கம்யூனிஸ்ட் கட்சியினரும் களம் புக ஆயத்தமாகி வருவதாகத் தெரிவதால் ஆத்தூரில் தேர்தல் களம் களை கட்டியுள்ளது. அரசியல் கட்சிகளோடு மக்கள் மத்தியில் பிரபலமான சுயேட்சைகளும் மல்லுக்கட்ட முடிவெடுத்திருப்பதால் அடுத்த மாதம் 17ம் தேதி நடக்கவுள்ள தேர்தலுக்கான பரபரப்பு இப்போதே ஒவ்வொரு வார்டிலும் துவங்கி விட்டது. நேற்று முன்தினம் மதியம் வரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையிலேயே விறுவிறுப்பாகி உள்ள ஆத்தூர் பஞ்.,தேர்தல் களம் வேட்புமனு தாக்கலுக்குப்பிறகு மேலும் சுறுசுறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது எனத்தெரிகிறது.