| ADDED : செப் 24, 2011 01:50 AM
தூத்துக்குடி : தேமுதிக., சார்பில் தூத்துக்குடி மாநகர மேயர் பதவி வேட்பாளராக ராஜேஸ்வரி அறிவிக்கப்பட்டுள்ளார். நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக., தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. நேற்று காலை 9 மாநகராட்சிக்கான வேட்பாளர்கள் பட்டியலை கட்சி தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக ராஜேஸ்வரி(வயது 29) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தேமுதிக., செயலாளர் சண்முகராஜாவின் மனைவி ஆவார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜேஸ்வரி கட்சியின் அடிப்படை உறுப்பினராக உள்ளார். இவர் பி.எஸ்.சி.,(கணிதம்) முடித்துள்ளார். இவருக்கு பூவிதா, நிவிதா என்ற இரு மகள்களும், ஷரிஷ்நாராயணன் என்ற மகனும் உள்ளார்.வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜேஸ்வரியிடம் பேசியபோது, என்னை தூத்துக்குடி மாநகர மக்கள் மேயராக தேர்ந்தெடுத்தால் மாநகர் பகுதியில் நிலவி வரும் அனைத்து பிரச்னைகளுக்கும் விரைவில் தீர்வு காண்பேன். குறிப்பாக குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். 1 மற்றும் 2ம் ரயில்வே கேட்டுகளில் மேம்பாலம் அமைக்கப்படும். போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்கு புதிய திட்டம் கொண்டு வரப்படும். அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரதான நுழைவு வாயில் அமைக்கப்படும் என்றார்.