ரூ.20 லட்சம் மோசடி வழக்கில் உ.பி., மாநில வாலிபர் கைது
துாத்துக்குடி,:துாத்துக்குடி மாவட்டம், சாகுபுரத்தில் செயல்படும் ரசாயன நிறுவனத்திற்கு போலி இ - மெயில் வாயிலாக தகவல் அனுப்பி, 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், உத்தர பிரதேசம் மாநிலம் இடாவா மாவட்டத்தை சேர்ந்த மோகித் பரிகார், 26, என்பவரை, கடந்த மாதம் 24ம் தேதி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான உத்தர பிரதேசம் மாநிலம், பரேலி மாவட்டத்தை சேர்ந்த சமீல் உதின், 25, என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து, நேற்று முன்தினம் பேரூரணி சிறையில் அடைத்தனர். சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொள்கின்றனர்.போலீசார் கூறியதாவது:சாகுபுரத்தில் உள்ள தனியார் ரசாயன நிறுவனம் தங்களுக்கு தேவையான, 'இல்மனைட்' என்ற தாதுவை, ஒடிசா மாநிலத்தில் இருந்து எடுத்து வர திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை தொடர்பு கொண்டது.அந்த டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் பெயரில் வந்த, இ - மெயிலில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கிற்கு, 20 லட்சம் ரூபாயை, சாகுபுரம் ரசாயன உற்பத்தி நிறுவனம் அனுப்பியது.பல நாட்களாகியும் தாது பொருள் வராததால் சந்தேகமடைந்த அந்த நிறுவன அதிகாரிகள், இ - மெயில் ஐ.டி.,யை சோதனை செய்தபோது, அது போலியானது என தெரிந்தது. இதுகுறித்து அவர்கள், சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின்படி, விசாரணை நடத்தப்பட்டது.ஏற்கனவே மோகித் பரிகார் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது, சமீல் உதின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.