| ADDED : ஜூலை 06, 2024 05:22 PM
திருப்பத்துார் : நாட்றம்பள்ளி அருகே, சாலையின் குறுக்கே மணல் மாட்டு வண்டியை நிறுத்தியதால் ஏற்பட்ட தகராறில், தொழிலாளியின் மண்டை உடைக்கப்பட்டது. ஆத்திரமடைந்த உறவினர்கள், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த ஆத்துார் குப்பத்தை சேர்ந்த தொழிலாளி சத்தியசீலன், 35, இவரது மகன் சரண் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவரை வழக்கமாக அழைத்து செல்லும் பள்ளி பஸ் நேற்று வந்தது. அப்போது, ஜங்களாபுரம்-ஆத்துார் குப்பம் சாலையில், அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் வீடு கட்டி வருகிறார். இதற்காக மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்து, சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்திருந்ததால், பள்ளி பஸ் செல்ல முடியாமல் தவித்தது. இதனால் தனியார் பள்ளி பஸ் டிரைவர் மற்றும் சத்தியசீலன் ஆகியோர் கிருஷ்ணகுமாரிடம், மணல் மாட்டு வண்டியை ஓரமாக நிறுத்துமாறு கூறினர்.இதில், அவர்களுக்கிடையே தகராறில் கிருஷ்ணகுமார், கல்லால் சத்தியசீலனின் மண்டையை தாக்கியதால் பலத்த காயமடைந்து, நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தப்பட்டார். ஆத்திரமடைந்த சத்தியசீலன் உறவினர்கள், நாட்றம்பள்ளி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் சமாதானம் செய்து, நடவடிக்கை எடுப்பதாக கூறி மறியலை கைவிட செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய கிருஷ்ணகுமாரை தேடி வருகின்றனர்.