தொழிற்சாலை காவலாளி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
திருப்பத்துார், ஆம்பூரில், தோல் தொழிற்சாலை காவலாளி வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர். திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர், மு.கா., கொல்லை பகுதியை சேர்ந்தவர் சபீர் அகமத், 40. இவர், ஆம்பூரிலுள்ள தனியார் தொழிற்சாலையில், இரவு காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது வங்கி கணக்கில், கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை நடப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரது வீட்டில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலிருந்து வந்த அமலாக்கத்துறை உதவி இயக்குனர் மோகித் தலைமையிலான, 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். நேற்று காலை, 9:00 மணியளவில் தொடங்கிய சோதனை மாலை, 7:00 மணி வரை தொடர்ந்து நடந்தது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் அவரது வீட்டில் கணினியிலுள்ள விபரங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.