ரூ.12 கோடி நிலம் மோசடி; சென்னை பெண்ணுக்கு கம்பி
திருப்பத்துார்: திருப்பத்துார் அருகே 12 கோடி ரூபாய் நிலத்தை மோசடி செய்த சென்னை பெண்ணை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த மோட்டூரை சேர்ந்தவர் விவசாயி பழனி, 55. இவருக்கு சொந்தமான, 11.50 ஏக்கர் நிலம், திருப்பத்துார் மாவட்டம், சுந்தரம்பள்ளி கிராமத்தில் உள்ளது. கடன் தொல்லையால், அந்த நிலத்தை, சென்னை, ஜாபர்கான்பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து, 6 கோடி ரூபாய் கடன் பெற திட்டமிட்டார். நிதி நிறுவனத்தில், கடன் அங்கீகரிக்கும் அதிகாரியாக பணியாற்றிய சங்கீதா, பழனியிடம் முழு விபரங்களை கேட்டு, இடத்தை பார்வையிட்டார். அப்போது, சங்கீதா, 'நிதி நிறுவனத்தில் அடமானம் வைக்க தேவையில்லை. என் பெயருக்கு நிலத்தை எழுதி கொடுத்தால் அதற்கான பணத்தை நான் தருகிறேன்' என, ஆசை வார்த்தை கூறினார். நம்பிய பழனி, தன், 11.50 ஏக்கர் நிலத்தை சங்கீதா பெயருக்கு சில மாதங்களுக்கு முன் எழுதி கொடுத்தார். சங்கீதா, 35 லட்சம் ரூபாய் மற்றும் எழுதப்படாத, நான்கு காசோலையை கையெழுத்திட்டு கொடுத்து விட்டு, 'பிறகு பணம் தருகிறேன்' என, கூறியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு, பழனியை தொந்தரவு செய்ததால், சங்கீதாவிடம் அவர் பணம் கேட்ட போதெல்லாம், சமாளிக்க, அவர் ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி வந்துள்ளார். மயங்கிபோன பழனி, சங்கீதா சொல்வதை கேட்டு நடந்தார். இதற்கிடையே, 12 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை பழனிக்கு தெரியாமல் விற்க சங்கீதா முயன்றார். விஷயம் தெரிந்து பழனி எதிர்ப்பு தெரிவித்தார். சங்கீதா, சென்னையை சேர்ந்த சிலரிடம் அந்த நிலத்தை காட்டி, 1 கோடி ரூபாய் முன்பணம் வாங்கினார். இதை பழனி தட்டி கேட்டபோது, 'சொத்து என்னுடையது. நான் விற்பேன்' என, சங்கீதா உரிமை கொண்டாட ஆரம்பித்தார். இதனால் கலங்கி போன பழனி, திருப்பத்துார் எஸ்.பி., அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம், சென்னை சென்று, சங்கீதாவை கைது செய்து, கந்திலி அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, அவர், பழனியிடம் நிலத்தை எழுதி வாங்கி, மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. சங்கீதாவை, வேலுார் பெண்கள் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.