உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போலீசாரின் மெத்தனத்தால் மற்றொரு அசம்பாவிதம்

போலீசாரின் மெத்தனத்தால் மற்றொரு அசம்பாவிதம்

உடுமலை:''மாணவன் கிருஷ்ணகுமார் இறந்த பின், போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால், அனூஜ் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கும்' என, பெற்றோர் புகார் தெரிவித்தனர்.உடுமலை ஆர்.கே.ஆர்., மேல்நிலைப் பள்ளியில், கடந்த 15ம் தேதி மாணவன் அனூஜ் தற்கொலை செய்து கொண்டான்; இவனது பெரியப்பா பால்சாமி கொடுத்த புகாரின் படி, பள்ளி தாளாளர் ராமசாமி, பொருளியல் ஆசிரியர் மகேஷ்வரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மகேஷ்வரனை, உடுமலை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகிய தாளாளரை தேடி வருகின்றனர். பள்ளியில், கடந்த ஒரு மாதத்தில், இரு மாணவர்கள் இறந்த சம்பவத்துக்கு பின், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோருக்கான கூட்டம் நேற்று நடந்தது. தாசில்தார் நல்லசாமி, டி.எஸ்.பி., செந்தில், முதன்மை கல்வி அலுவலரின் உதவியாளர் நூர்மாலிக் பங்கேற்றனர். பெற்றோர் பலர் பேசியதாவது:பள்ளியில், ஆசிரியர்களின் நியமனத்தில் கவனம் செலுத்தாமல், 19 - 22 வயது வரையுள்ளோரை, குறைந்த ஊதியத்தில் வேலைக்கு அமர்த்துகின்றனர். ஆசிரியர்கள் சிலரின் விதிமீறிய செயலால், மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்படுகிறது. பி.டி.ஏ., தலைவராக, பெற்றோர் ஒருவர் இருக்க வேண்டும். 100 சதவீதம் தேர்ச்சியை எதிர்பார்க்கும் பள்ளி நிர்வாகத்தின் தவறான முடிவால் தான், இதுபோன்ற நிலை ஏற்படுகிறது. ஆர்.கே.ஆர்., பள்ளி என்றாலே, மாணவர்களை அடிப்பார்கள் என்ற அச்சம் தோன்றுவதால், மாணவர்கள் பள்ளி செல்ல தயக்கம் காட்டுகின்றனர். மாணவர்களை பார்க்க பள்ளிக்கு செல்லும் பெற்றோரை, தரக்குறைவாக நடத்துகின்றனர்; உரிய கட்டணம் செலுத்தினால் முறையான ரசீதும் வழங்கப்படுவதில்லை. அதே நேரத்தில், கட்டணம் செலுத்தத் தவறினால், மாணவர்கள் வெளியே நிறுத்தப்படுகின்றனர். பள்ளி நிர்வாகத்தின் மேல் உள்ள அச்சத்தால், உடல் நிலை சரியில்லை என்றாலும், பலர் வெளியே சொல்வதில்லை. கிருஷ்ணகுமார் என்ற மாணவன், மர்மமாக இறந்த போது, தாளாளர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், அனூஜ் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால், போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. தவறு செய்தால் திருத்துவது ஆசிரியர்களின் கடமை; அதை விடுத்து, 'செத்துப் போ; 5 லட்சம் தருகிறேன்' என கூறிய ஆசிரியர், வில்லனாகவே நடந்து கொண்டிருக்கிறார்.இவ்வாறு, பெற்றோர் குற்றம் சாட்டினர்.பள்ளி நிர்வாகம் சார்பில், தலைமையாசிரியர் ராஜேந்திரன் பேசுகையில், ''பி.டி.ஏ., கூட்டம், கட்டாயமாக நடத்தப்படும். பி.டி.ஏ., தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றோருக்கே உள்ளது. பள்ளி, திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும். மாணவர்களுக்கு மருத்துவ வசதி அளிக்கும் வகையில், 24 மணி நேரமும் பள்ளியில் இருக்கும் வகையில், மருத்துவர் நியமிக்கப்படுவர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாது, என உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. மாணவர்களின் மனவோட்டத்தை மாற்ற, மனோதத்துவ நிபுணரை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,'' என்றார்.முதன்மை கல்வி அலுவலர் உதவியாளர் நூர் மாலிக் பேசுகையில், ''பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். தேர்வு நேரத்தில் கண்காணிக்க அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவர்; பள்ளியில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பி.டி.ஏ., தலைவராக பெற்றோர் ஒருவர் நியமிக்கப்படுவர். மாணவர்கள், தங்களது கருத்துகள் மற்றும் குறைகளை தெரிவிக்க, பி.டி.ஏ., சங்கம் மற்றும் பள்ளி நிர்வாகத்துக்கு என தனித்தனி பெட்டி வைக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது. 19ம் தேதி (இன்று) 6, 7, 8, 9ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் பங்கேற்கும் கூட்டம் நடக்கிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை