| ADDED : ஜூன் 29, 2024 02:36 AM
அனுப்பர்பாளையம்;திருப்பூரில் உள்ள மாநகராட்சித் துவக்கப்பள்ளியில் ஒரே அறையில் இரண்டு வகுப்புகள் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சி, 24வது வார்டு, சாமுண்டி புரம் செல்லம்மாள் காலனியில் மாநகராட்சி துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 240 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி பழைய கட்டடத்தில் இயங்கி வருவதால், பாதுகாப்பு நலன் கருதி அதை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர். புதிய கட்டடம் கட்ட மாநகராட்சி சார்பில், ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக நான்கு வகுப்பறையை இடித்து விட்டு, அதில் கட்டடம் கட்ட அஸ்திவாரம் போட குழி தோண்டி உள்ளனர். அஸ்திவாரம் குழி தோண்டி, ஒரு மாதமாகியும் இன்னும் பணி துவங்கப்படவில்லை. கட்டடம் கட்ட நான்கு வகுப்பறை இடிக்கப்பட்டதால், மீதமுள்ள வகுப்பறையில் மாணவர்கள் நெருக்கடியில் அமர்ந்து படித்து வருகின்றனர். ஒரு அறையில், 40 பேர் அமர வேண்டிய நிலையில், 80 பேர் உட்கார வைக்கப்பட்டுள்ளனர்.பெற்றோர் கூறியதாவது: புதிய கட்டடம் வேண்டும் என்பது, பல ஆண்டு கோரிக்கை. புதிய கட்டடத்தை கோடை விடுமுறை நாளில் கட்டி இருக்கலாம். தற்போதுகூட பணி மந்த நிலையில் நடக்கிறது. மாணவர்கள் நெருக்கடியில் அமர்ந்து படித்தால் எப்படி படிப்பு வரும்? ஒரே வகுப்பறையில் இரண்டு வகுப்பு மாணவர்கள் அமர்ந்து படித்தால், மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படும்.கட்டட பணியை வேகப்படுத்த வேண்டும். இல்லை என்றால் கட்டட பணி முடியும் வரை பள்ளியை தற்காலிகமாக வேறு இடத்தில் இயக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். ---திருப்பூர் சாமுண்டிபுரம், செல்லம்மாள் காலனியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளிக்குப் புதிய வகுப்பறைக் கட்டடம் கட்ட அஸ்திவாரம் தோண்டப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகிறது. ஆனால், பணி துவங்கப்படவே இல்லை.விளைவு: ஒரே வகுப்பறையில், இரண்டு வகுப்புகள் நடக்கின்றன. இடையில் தட்டிவைத்தாவது மறைத்திருக்கலாம். அதுவும் இல்லை. 'மாநகராட்சிப்பள்ளிகளில் சேருங்கள்' என்று விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டால் மட்டும் போதுமா?