| ADDED : ஜூலை 09, 2024 10:58 PM
அவிநாசி:அவிநாசி கோவிலில் உள்ள நட்சத்திர நந்தவனத்தில், இரண்டு பனை மரம் வெட்டிச் சாய்த்தவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தெற்கு பகுதியில் நட்சத்திர நந்தவனம் அமைந்துள்ளது. அதில் இருந்த இரண்டு பனை மரங்களை நேற்று சிலர் வெட்டி சாய்த்தனர். ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நந்தவன வளாகத்தில் புகுந்து சமூகவிரோதிகள் பட்டப்பகலில் பனை மரங்களை வெட்டி சாய்த்து உள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்.இது குறித்து, செயல் அலுவலர் சீனிவாசனிடம் கேட்டதற்கு, ''கடந்த மூன்று மாதம் முன், நந்தவனம் அருகில் சர்வீஸ் ஸ்டேஷன் வைத்துள்ள நந்தகுமார் என்பவர் மரத்தை வெட்டுவது தொடர்பாக கேட்டார். ஆனால்,வருவாய்த்துறையினருக்கும் உரிய மனு அளித்து அனுமதி பெற்ற பின்னர் தான் எதுவாக இருந்தாலும் முடிவு செய்ய முடியும் என்று சொன்னேன். ஆனால், இன்று (நேற்று) எந்தவித அனுமதியும் இல்லாமல் மரத்தை வெட்டி உள்ளார்,'' என்றார்.பனை மரம் வெட்டப்பட்டது குறித்து, கோவில் நிர்வாகம் சார்பில், அவிநாசி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜவேல், தாசில்தார் மோகனன், ஆர்.ஐ., மகேஸ்வரி ஆகியோர், கோவில் நந்தவனத்தில் ஆய்வு செய்து சென்றனர். ---அவிநாசி கோவில் நந்நவனத்தில் வெட்டி சாய்க்கப்பட்ட பனை மரங்கள்.