திருப்பூர் : ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன ஓவர்லாக் தையல் மெஷினை, நாட்டில் முதல் முறையாக, சங்கத் மெஷின் நிறுவனம், திருப்பூரில் வரும் 26ம் தேதி அறிமுகப்படுத்துகிறது.இதுகுறித்து, சங்கத் மெஷின் நிர்வாக இயக்குனர் சேதுபதி தாமோதரன் கூறியதாவது:உலகில் முதன்முறையாக, ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன தையல் மெஷின் 'புரூஸ்'-ஐ, உருவாக்கியுள்ளது, ஜாக் நிறுவனம். சீனாவில் கடந்த ஜூனில், மெஷின் அறிமுக விழா நடைபெற்றபோது, 35 நாடுகளைச்சேர்ந்த வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். திருப்பூரிலிருந்து, ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்றார்.இந்த தையல் மெஷினில், 'பிரஷர் புட் டரான்ஸ்பார்மர் டெக்னாலஜி சிஸ்டம்', 'ஸ்மார்ட் டிரெய்னோ பீடிங் டெக்னாலஜி' ஆகிய இரண்டுவகையான தொழில்நுட்பங்கள் உள்ளன. அனைத்துவகை துணிகளையும், மிக நேர்த்தியாகவும், அதி விரைவாகவும் தைக்கமுடியும். ஊசி உடைதல், நுால் அறுபடுதல் ஏற்படாமல் தடுக்கப்படுவதால், உற்பத்தி வேகம் பெறுவதோடு, மெஷினின் ஆயுட்காலமும் அதிகரிக்கும்.இந்தியாவில் முதன்முறையாக, 26ம் தேதி (நாளை) திருப்பூர், வேலன் ஓட்டல் மான்செஸ்டர் அரங்கில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய ஓவர்லாக் மெஷின் அறிமுகமாகிறது. ஜாக் நிறுவனம் மற்றும் சங்கத் மெஷின் இணைந்து இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன், துணை தலைவர் இளங்கோ, பொதுச்செயலாளர் திருக்குமரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். முழு இயக்கநிலையில் இம்மெஷின் காட்சிக்கு வைக்கப்படுகிறது. திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர் அனைவரும், தவறாமல் இந்த அதிநவீன தையல் மெஷினை பார்வையிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.