உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சைபர் மோசடிக்காரர்கள் வலையில் சிக்கிய பெண்

சைபர் மோசடிக்காரர்கள் வலையில் சிக்கிய பெண்

இணையவழி பொருளாதார குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தகவல் தொழில்நுட்ப சேவைகளை முறைகேடாக பயன்படுத்துதல், இ-மெயில் மற்றும் இன்டர்நெட் கால் மூலம் மிரட்டுதல், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மோசடி செய்தல், கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களில் இருந்து தகவல்கள் திருடுதல், பிறரது தகவல் மற்றும் போட்டோக்களை சித்தரித்து பயன்படுத்துதல் போன்ற பல்வேறு 'சைபர்' குற்றங்கள் அதிகரித்துள்ளன.இதுதொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும், அன்றாடம் ஏதாவது ஒரு வகையில் மக்கள் தங்களை பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். நீண்ட காலமாக சேமித்து வைக்கும் தொகையை, சில நிமிடங்களில் இழந்து விடுகின்றனர்.சமீப காலமாக, பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், ஓட்டல் ரீவ்யூ செய்வது, விளம்பர 'டாஸ்க்'களை முடிப்பதால் அதிக லாபம், லோன் ஆப்களில் கடன் என, பல நுாதனவிளம்பரங்களை பார்த்து பணத்தை இழந்து வருகின்றனர்.திருப்பூரை சேர்ந்த, 35 வயது பெண். பனியன் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுப்பிரிவில் பணிபுரிகிறார். பெண்ணின் சமூக வலைதளப் பக்கத்தில், 'முதலீடு செய்யாமல், எளிதாக பணம் சம்பாதிக்கலாம்' என்ற விளம்பரத்தை பார்த்தார். இதை நம்பி, அவர்களின் வாட்ஸாப் குழுவில் இணைந்து, கொடுக்கப்படும் பொருள்களுக்கு 'ரீவியூ' கொடுத்தார். அதற்காக, சிறிய தொகையை கொடுத்து நம்ப வைத்தனர். அடுத்த 'டாஸ்க்'கும் சென்ற போது, டெலிகிராம் குழுவில் இணைய வைத்தனர்.தொடர்ந்து 'ரீவியூ' கொடுத்து வர, அதில் வந்த பணத்தை எடுத்துக்கொள்ள, ஒரு சிறிய தொகை கட்ட வேண்டும் என்று சொல்லி நம்ப வைத்தனர். இவ்வாறு பலமுறை, 12.30 லட்சம் ரூபாயை, அந்த பெண் செலுத்தினார். இருப்பினும், தனக்கு வந்த பணத்தை எடுக்க முடியாமல் போனதால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பேராசை பெருநஷ்டம்

திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:மக்களின் அறியாமை, பேராசை போன்றவற்றை பயன்படுத்தி கும்பல்கள் பணத்தை எளிமையாக மோசடி செய்கின்றனர். சமீப காலமாக, பங்குசந்தை முதலீடு, ஓட்டல் ரீவ்யூ, விளம்பர 'டாஸ்க்'குகளை முடிப்பது போன்ற பாணியில் பணத்தை பறிக்கின்றனர்.இதுதவிர போலீஸ் உயரதிகாரிகள் பேசுவதாக கூறி ஏமாற்றுகின்றனர். எக்காரணத்தை கொண்டு வங்கி விபரங்களை பகிரக்கூடாது. இதுபோன்று ஏதாவது சந்தேகப்படும் வகையில் இருந்தால், உடனடியாக போலீசாரை அணுக வேண்டும். அதிக லாபம் கிடைக்கும் என்பது போன்ற விளம்பரத்தை நம்பி, யாரும் முதலீடு செய்ய வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்