திருப்பூர் : ஆஷாட ஏகாதசியான நேற்று, ராயபுரம் பாண்டுரங்கன் - ருக்மாயி சன்னதியில், பக்தர்கள் கருவறைக்குள் சென்று வழிபட்டனர்.திருப்பூர், ராயபுரத்தில் உள்ள ராஜவிநாயகர் கோவில் வளாகத்தில், பாண்டுரங்கன், ருக்மாயி சன்னதி உள்ளது. பாண்டுரங்கன் என்ற பெயருடன் எம்பெருமாள், நின்ற திருக்கோலத்தில், ருக்மாயி அன்னையுடன் அருள்பாலிக்கிறார்.மகாராஷ்டிரா மாநிலம், பண்டரிபுரத்தில், சாலிக்கிராம கற்களால் வடிவமைக்கப்பட்ட, பாண்டுரங்கன் - ருக்மாயி சிலைகள், திருப்பூர் சன்னதியில் பிரதிஷ்டை செய்து, 20 ஆண்டுகளாக வழிபாடு நடந்து வருகிறது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆஷாட ஏகாதசி நாளில், பக்தர்கள் கருவறைக்குள் சென்று, சுவாமியின் பாதங்களை தொட்டு வணங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.அதன்படி, ஆடி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியான நேற்று, ஆஷாட ஏகாதசி அனுசரிக்கப்பட்டது. ராஜவிநாயகர் கோவில் கும்பாபிேஷகம் விமரிசையாக நடந்து முடிந்துள்ள நிலையில், நேற்று 21ம் ஆண்டு ஆஷாட ஏகாதசி வழிபாடு விமரிசையாக நடந்தது. அதிகாலையில், பாண்டுரங்கன் - ருக்மாயி அன்னைக்கு, சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் பாண்டுரங்க பெருமாள் அருள்பாலித்தார். பக்தர்கள், காலை, 10:00 மணி முதல், இரவு, 9:00 வரை, கருவறைக்குள் சென்று, சுவாமியின் திருப்பாதங்களை தொட்டு வணங்கினர். 'ரெங்கா ரெங்கா ஓடிவா... பாண்டுரங்கா ஓடிவா' என்று மனமுருக பாடியபடி பெருமாளை வழிபட்டனர்.