திருப்பூர்:திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு நேற்று, விமரிசையாக நடந்தது. ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்கள் திருவிழாக்கோலம் பூணுகின்றன. முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, திருப்பூர், பல்லடம், அவிநாசி சுற்றுப்பகுதிகளில் உள்ள, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவில், முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவில், டவுன் மாரியம்மன் கோவில், ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவில், பெரியார்காலனி கருப்பராயன் கோவில்;வாலிபாளையம் மாகாளியம்மன் கோவில் அணைக்காடு மாரியம்மன் கோவிலில், வெள்ளிக்கவச அலங்கார பூஜைகள் நடந்தது. நெசவாளர் காலனி ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு, புஷ்பாலங்காரமும், திருக்குமரன் நகர் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு, சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. வேலம்பாளையம் கரியகாளியம்மன் கோவில், மங்கலம் பல்லடத்தம்மன் கோவில், கஞ்சம்பாளையம் ஸ்ரீமகாமாரியம்மன் கோவில், பல்லடம் பொங்காளியம்மன் கோவில் உட்பட, அனைத்து அம்மன் கோவில்களிலும், அதிகாலையில் சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு, வேப்பிலை மாலை, எலுமிச்சை மாலை அலங்காரர பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில், வேப்பிலை தோரணம் கட்டப்பட்டிருந்தது. அம்மனுக்கு, வெங்காயம் கலந்த ராகிக்கூழ் படைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆடி வெள்ளி விரதம் இருந்த பெண்கள், மாவிளக்கு தீபம் ஏற்றி வைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவில்களில், பெண்களுக்கு, மஞ்சள் சரடு, மஞ்சள் - குங்குமம், வளையல் மற்றும் பூ ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.