உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மேம்பாலத்தில் குளறுபடி தொடரும் உயிரிழப்புகள் தீர்வு காண ஆய்வு நடத்தணும்

மேம்பாலத்தில் குளறுபடி தொடரும் உயிரிழப்புகள் தீர்வு காண ஆய்வு நடத்தணும்

உடுமலை;உடுமலை ரயில்வே மேம்பாலம் திட்ட குளறுபடி காரணமாக, தொடர் விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.உடுமலை -- தளி ரோட்டில், ரயில்வே கடவு எண் 95க்கு பதிலாக, நகராட்சி அருகே, 12.70 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் அமைக்க, 2006--- 07ல் நிதி ஒதுக்கப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின், 2014ல், பாலம் பயன்பாட்டுக்கு வந்தது.பணிகள் துவங்கிய போது, திட்ட வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டது. முதலில், 650 மீட்டர் நீளம், 8.50 மீட்டர் அகலம் மற்றும் இரு புறமும் தலா, 5.50 மீட்டர் அகலத்தில் சர்வீஸ் ரோடு, தலா, 1.50 மீட்டர் அகலத்தில் நடைபாதை மற்றும் மழை நீர் வடிகால் கட்ட திட்டமிடப்பட்டது.

திட்டத்தில் மாற்றம்

ஆனால், ரயில்வே பகுதி மேம்பாலத்தின் உயரம், திட்ட வடிவமைப்பு அளவை விட, 1.5 மீட்டர் உயரம் கூடுதலாக கட்டப்பட்டது. இதனால், பாலத்தின் இருபுறமும் தலா, 50 மீட்டர் என, பாலத்தின் நீளம் மொத்தம், 100 மீட்டர் அதிகரித்தது.மேலும், மேம்பாலம் பகுதியிலேயே, சுரங்க பாலமும் அமைக்கப்பட்டது, இதனால், சர்வீஸ் ரோடு, இணைப்பு சாலை திட்டங்களில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.நகராட்சி அலுவலகம் பகுதியிலுள்ள நுழைவு பகுதியில், பாலம் பயன்பாட்டுக்கு வந்தது முதல் போக்குவரத்தில் குழப்பம் நிலவுகிறது.பாலத்தின் இருபுறங்களிலும் உள்ள சர்வீஸ் ரோடு மட்டுமல்லாது, நகராட்சி ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தில் இணையவும், தளி ரோட்டை கடந்து காந்திசவுக் சர்வீஸ் ரோட்டுக்கு செல்ல முற்படும் போது விபத்துகள் ஏற்படுகிறது.பாலத்திலிருந்து வாகனங்கள் வேகமாக கீழிறங்கும் போது, திடீரென வாகனங்கள் குறுக்கிடுவதால், வேகத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை. பாலத்திலிருந்து நேராக செல்லாமல், நகராட்சி ரோடு மற்றும் அணுகுசாலைக்கு திரும்பும் போது, பின்னால் வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது.திட்ட குளறுபடி காரணமாக, தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 50க்கும் மேற்பட்ட விபத்துக்களும், 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஆய்வு செய்யுங்க!

பல ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனவே, மாவட்ட கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அதிகாரிகளை கொண்ட குழுவினர் ஆய்வு செய்து, ரயில்வே மேம்பாலம் பகுதியில், விபத்துக்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாலத்திலிருந்து வரும் வாகனங்கள், நேராக செல்லும் வகையில், நகராட்சி அலுவலக பகுதி மற்றும் ஒன்றிய அலுவலக பகுதி என இரு புறமும் சென்டர்மீடியன் அமைக்க வேண்டும்.இரு புறமும் உள்ள சர்வீஸ் ரோட்டில் வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுவதை தடுக்க, இரு புறமும் ரவுண்டானா அமைக்க வேண்டும். ரயில்வே கீழ் பாலம் பகுதியில், வாகனங்கள் ஒரே வழித்தடத்தில் செல்வதை தடுக்கும் வகையில், இணைப்பு ரோடு அமைக்க வேண்டும். இதற்கு, விரிவாக ஆய்வு செய்து, விபத்துக்களை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ