| ADDED : ஆக 18, 2024 11:15 PM
பல்லடம்:'மூன்று முதல்வர்களால் நிறைவேறிய திட்டம்' என, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.இதன் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர காரணமாக இருந்த அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்ட குழு கூட்டமைப்பு மற்றும் களம் கண்ட அனைத்து போராளிகளுக்கும், விவசாயிகளுக்கும், பல்வேறு அமைப்புகளுக்கும், ஆதரவு கொடுத்த அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இத்திட்டத்தை செயல்படுத்த கோரி, மூன்று தலைமுறைகளாக, பல்வேறு வடிவங்களில், பல்வேறு காலகட்டங்களில் தொடர்ச்சியான போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. இளைஞர்கள் முதல் முதியோர் வரை அனைவரும் பங்கேற்ற கடும் போராட்டம் காரணமாக, இத்திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றும் என உறுதியளித்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, நிதி ஒதுக்கிய பழனிசாமி, திட்டத்தை துவக்கி வைத்த ஸ்டாலின் என, மூன்று முதல்வர்களால் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இத்திட்டத்தில் பணியாற்றிய அனைத்து பொறியாளர்களுக்கும், பாராட்டு தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.