உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை: கறிக்கோழி உற்பத்தியாளர் தகவல்

பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை: கறிக்கோழி உற்பத்தியாளர் தகவல்

பல்லடம் : பல்லடம் வட்டாரத்தில், பறவைக்காய்ச்சல் பாதிப்பு எதுவும் கிடையாது என, பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் பரவாமல் இருக்க வேண்டி, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஆனால், கறிக்கோழிகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்புகள் எதுவும் கிடையாது என்றும் பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும், பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.,) தெரிவித்துள்ளது.இதுகுறித்து பி.சி.சி., நிர்வாகிகள் கூறியதாவது:கேரள மாநிலத்தில் வாத்துகளுக்கு தான் பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அம்மாநில அரசு போதிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், கறிக்கோழிகளுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. தமிழகத்திலிருந்து கேரளாவுக்கும் கறிக்கோழிகள் விற்பனைக்கு செல்கின்றன.இவ்வாறு செல்லும் கறிக்கோழிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என, மருத்துவ பரிசோதனைக்கு பின் சான்று பெற்ற பின்பு தான், அவை கேரளாவுக்கு செல்கின்றன. மேலும், கறிக்கோழிகள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் மாநில எல்லையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின், வாகனங்களில் மருந்துகள் தெளிக்கப்பட்ட பின்பு தான் மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன.இதேபோல், வாகனங்கள் தமிழகத்துக்கு திரும்பும் போதும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், கறிக்கோழிகளுக்கு பறவை காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு கிடையாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !