- நிருபர் குழு -உடுமலை, பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கோவில்களில், சித்திரை திருநாள் நேற்று சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது.சித்திரை முதல் நாள், வளம் பெருகவும், வாழ்க்கை செழிக்கவும், முக்கனிகளை வைத்தும், பொன் பொருள் வைத்தும், வரவேற்று வீடுகளில் மக்கள் வழிபட்டனர்.உடுமலை, சுற்றுப்பகுதி கோவில்களிலும், நேற்று கனி தரிசனத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. பிரசன்ன விநாயகர் கோவிலில், விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது.சவுரிராஜ பெருமாள் சுவாமிகள், சுப்ரமணிய சுவாமிகள், ஆஞ்சநேயருக்கும் சிறப்பு பூஜை நடந்தது.நெல்லுக்கடை வீதி, நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.தில்லை நகர் ரத்தினலிங்கேஸ்வரர் உடனமர் ரத்தினாம்பிகை அம்பாளுக்கு பழங்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.முத்தையா பிள்ளை லே - அவுட் அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத சோழீஸ்வரர் சுவாமிக்கு அபிேஷக அலங்கார பூஜை நடந்தது. ஜி.டி.வி., லே அவுட் செல்வ விநாயகர் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜையும், சஷ்டியையொட்டி பாலமுருகனுக்கு அபிேஷக ஆராதனையும் நடந்தது.சித்திரை திருநாள் சிறப்பு பூஜையுடன், மண்டல பூஜை நிறைவு வழிபாடும் நடந்தது. ருத்தரப்ப நகர் ஆனந்த சாய் கோவில், குட்டைத்திடல் விநாயகர் கோவில், சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில், காமாட்சியம்மன் கோவில், வ.உ.சி., வீதி பெருமாள் கோவில்களிலும், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலிலும் தமிழ் புத்தாண்டு, சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை நடந்தது.பக்தர்கள், திரளாக சென்று இறைவழிபாட்டுடன் புத்தாண்டை கொண்டாடினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி
பொள்ளாச்சி கோவில்களில் தமிழ் புத்தாண்டை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. சித்திரை முதல் தேதியான நேற்று தமிழ் ஆண்டு பிறப்பு கொண்டாடப்பட்டது. புத்தாண்டை வரவேற்க, பொள்ளாச்சி பகுதி மக்கள் காலை முதலே கோவில்களில் குவிந்தனர்.சுப்பிரமணியர் கோவில், ஐயப்பன் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் புத்தாண்டு மற்றும் சித்திரை கனி சிறப்பு பூஜை ஆராதனைகள் நடந்தன சுவாமிக்கு பக்தர்கள் கனிகள் படைத்து, இந்தாண்டு முழுக்க இனிமையாக அமைய வேண்டுமென வேண்டிக்கொண்டனர்.சிலர், கடவுளுக்கு கனகாபிஷேகம் செய்வித்தனர். சுவாமிக்கு படைக்கப்பட்ட கனி வகைகள், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.அவ்வகையில், கொண்டேகவுண்டன்பாளையம் களப்பூசக்காட்டில் கம்பளி நாயக்கர் கோயிலில் நேற்று காலை, 7:00 மணிக்கு சர்க்கரை விநாயகருக்கும், 8:00 மணிக்கு கம்பளி நாயக்கருக்கும் 16 வகையான அபிஷேகப் பொருட்களால் சிறப்பு பூஜை நடந்தது.திருமூர்த்திமலை, கப்பளாங்கரை உள்ளிட்ட பல்வேறு திருத்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல, ஆனைமலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவிலில், 9 வகை அபிேஷகம் நடத்தப்பட்டது. ஆபரணங்கள் மற்றும் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.