உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கரைப்புதுாரில் கலர் கலராக ஆழ்துளைக் கிணற்று நீர்

கரைப்புதுாரில் கலர் கலராக ஆழ்துளைக் கிணற்று நீர்

பல்லடம் : கரைப்புதுார் கிராமத்தில் ஆழ்துளைக்கிணற்றில் பல வண்ணங்களில் தண்ணீர் வருவதால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அங்கு காற்றும், நீரும் மாசுபட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியமோ 'மவுனம்' காக்கிறது.முறைகேடாக சாயக்கழிவு நீரை வெளியேற்றும் சில சாய ஆலைகளால், பல்லடம் அடுத்த கரைப்புதுார் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சின்னக்கரை லட்சுமி நகரில் உள்ள அபிராமி நகரில், பல்வேறு வண்ணங்களில் ஆழ்துளை கிணற்று நீர் வருவது, இப்பகுதி பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.பொதுமக்கள் கூறியதாவது:அபிராமி நகரில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த ஒரு மாதமாக, இங்குள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீர் நிறம் மாறியுள்ளது. சிவப்பு, மஞ்சள், கருப்பு, ஆரஞ்சு என, ஒவ்வொரு குடியிருப்புகளிலும் பல்வேறு நிறங்களில் தண்ணீர் வருகிறது.இப்பகுதியில் உள்ள கிணறுகளில் தண்ணீர் முழுவதுமாக நிறம் மாறிவிட்டது. நிறம் மாறிய இந்த தண்ணீரை பயன்படுத்தினால் உடலில் அரிப்பு ஏற்படுகிறது. வீட்டின் குழாய்கள், வாளி உள்ளிட்டவை துருப்பிடிக்கின்றன.இதுதவிர தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கரும்புகையால், இப்பகுதியில் கடும் மாசு ஏற்படுகிறது. கரும்புகை வீடுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் மேல் படிகின்றன. எப்படி சுத்தம் செய்தாலும் கரும்புகை படிந்ததை அகற்ற முடிவதில்லை. இவ்வாறு, இப்பகுதியில் கடும் காற்று - தண்ணீர் மாசு ஏற்பட்டு வருகிறது. இம்முறையாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்று தெரியவில்லை.இவ்வாறு, பொதுமக்கள் கூறினர்.---கரைப்புதுார், அபிராமி நகரில் உள்ள குடியிருப்புகளில், பல்வேறு நிறங்களில் வரும் ஆழ்துளைக் கிணற்று நீர்.ஆழ்துளைக் கிணற்று நீர் நிறம் மாறி வருவதைக் காட்டும் மக்கள்.ஆலையில் இருந்து வெளியேறும் கரும்புகை படிந்து நிறம் மாறிய செம்பு குடத்தை காட்டிய பெண்.

மாசுக்கட்டுப்பாட்டு

வாரியம் 'மவுனம்'''தண்ணீர் நிறம் மாறி வருவது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது மீண்டும் அதேபோன்ற பிரச்னை எழுந்துள்ளது. ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்த முடியாத நிலை இப்பகுதியில் உள்ளது'' என்று கூறுகின்றனர் அபிராமி நகர் மக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை