| ADDED : ஜூன் 28, 2024 02:53 AM
திருப்பூர்:தமிழக வரலாற்றை மறைத்து சட்டசபையில் பேசியதாக, அமைச்சர் சேகர்பாபுவுக்கு ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:கோவில்களை தமிழர்கள் கலவரமாக பார்க்காமல், கலையாக பார்த்ததால் கோவில் நிறைந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்று ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் பேசியுள்ளார்.எந்த சட்டசபையில் நின்று இவர் பேசுகிறாரோ, அந்த இடத்தில் தான் சென்னை மல்லீஸ்வரர் கோவில், சென்னகேசவ பெருமாள் கோவில் ஆகியன இருந்தன.இவற்றை ஆங்கிலேயர்கள் இடித்து தான் ஜார்ஜ் கோட்டையை கட்டினர். மயிலாப்பூர் கடலையொட்டி இருந்த கபாலீஸ்வரர் கோவிலை இடித்து அங்கு கட்டப்பட்டது தான் செயின்ட் தாமஸ் சர்ச். இப்போது உள்ள கோவில் அதன்பின் கட்டப்பட்டது. பல கோவில்களை, மதவெறி பிடித்த ஆங்கிலேயர்கள் இடித்த வரலாறு உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும், ஸ்ரீரங்கமும் 40 ஆண்டு முகலாயர்களின் ஆக்கிரமிப்பால் மூடி கிடந்த சரித்திரம் அமைச்சருக்கு தெரியாது.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நுாற்றுக்கணக்கான கோவில்களை இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர்.முகலாய ஆக்கிரமிப்பாளர்கள் தமிழகத்தில், 300 கோவில்களை இடித்து மசூதி, தர்கா கட்டியதற்கு ஆதாரப்பூர்வமான பட்டியல் இருக்கிறது. இஸ்லாமிய படையெடுப்பாளர்களை பக்தி நெறியோடு வாழ்ந்த தமிழ் மன்னர்களும், பாளையக்காரர்களும், வடக்கே இருந்த மன்னர்களும் விஜயநகர பேரரசும், மராட்டிய வீரசிவாஜி மற்றும் வம்சத்தவர்களும், தடுத்து நிறுத்தியதால் தான் தமிழக கோவில்கள் காப்பாற்றப்பட்டன என்பதை, சேகர்பாபு மறக்க வேண்டாம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.