உடுமலை:அமராவதி அணையிலிருந்து, குடிநீர் தேவைக்காக, நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், அமராவதி ஆற்றின் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.பருவ மழைகள் குறைவால், அணை நீர் இருப்பு குறைவாக உள்ளதோடு, பாசன பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது.இந்நிலையில், தாராபுரம் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டு குடிநீர் திட்டங்கள் மற்றும் தாராபுரம் நகராட்சி குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, அமராவதி அணையிலிருந்து நீர் திறக்க அரசு உத்தரவிட்டிருந்தது.அதன் அடிப்படையில், நேற்று காலை முதல், ஆற்று மதகு வழியாக, வினாடிக்கு ஆயிரம் கன அடி திறக்கப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், 'அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக, வரும், 21ம் தேதி வரை, 5 நாட்களுக்கு, 328.32 கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், முதல் இரண்டு நாட்கள் வினாடிக்கு, ஆற்றில், ஆயிரம் கனஅடி நீரும், 3 நாட்களுக்கு, 600 கன அடி நீரும் திறக்கப்படும்,' என்றனர். அணை நிலவரம்
நேற்று காலை நிலவரப்படி, அமராவதி அணையில், மொத்தமுள்ள, 90 அடியில், 39.50 அடி நீர்மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 715.57 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது.அணைக்கு வினாடிக்கு, 44 கனஅடி நீர் வரத்தும், குடிநீருக்காக, வினாடிக்கு, ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.