| ADDED : ஜூலை 16, 2024 11:31 PM
உடுமலை:உடுமலை அருகே பயன்பாடில்லாத அரசு கட்டடம், சமூக விரோதிகள் கூடாரமாக மாறியுள்ளதால், கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். உடுமலை ஒன்றியம் பூலாங்கிணறு ஊராட்சிக்குட்பட்ட முக்கோணத்தில், தேசிய நெடுஞ்சாலையையொட்டி கால்நடைத்துறையின் கால்நடை மருந்தகம் செயல்பட்டு வந்தது.மேற்கூரை மற்றும் சுவர்கள் விரிசல் விட்டு, அக்கட்டடம் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியதால், சில ஆண்டுகளுக்கு, முன்பு, கால்நடைத்துறைக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில், மாற்று இடம் வழங்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டப்பட்டது.புதிய கட்டடத்திற்கு கால்நடை மருந்தகம் மாற்றப்பட்டதால், பழைய கட்டடம் யாருக்கும் பயனில்லாமல், வீணாக விடப்பட்டது. தற்போது, இக்கட்டடம் சமூக விரோதிகள் கூடாரமாக மாறி விட்டது.பாழடைந்து வரும் கட்டடம் மற்றும் புதர் மண்டி கிடக்கும் வளாகத்தால், அவ்வழியாக செல்வோர் அச்சப்பட வேண்டியுள்ளது.பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, மாற்று பயன்பாட்டுக்கு இடத்தை பயன்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.