| ADDED : ஜூலை 17, 2024 11:54 PM
பல்லடம் : சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்து மாத் திரைகளைக் கூட இளைஞர்கள் பலர் போதைக்காக பயன்படுத்தி வரும் நிலையில், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் என, இந்திய மருத்துவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரைகளையும் இளைஞர்கள் பலர் போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.சமீபத்தில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே போதைக்காக பயன்படுத்தப்பட்ட 800 மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆன்லைன் மூலமாக இந்த மாத்திரைகள் பெறப்பட்டன.இந்திய மருத்துவர் சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர்டாக்டர் ராஜ்குமார் கூறியதாவது:வலி நிவாரணி மாத்திரை என்பது இரண்டு வகையாக உள்ளது. வலியுள்ள இடத்துக்குச் சென்று வலியை குறைப்பது ஒரு வகை; வலி ஏற்படும் இடத்துடன் தொடர்புடைய நரம்பு மண்டலத்தை தற்காலிகமாக செயல் இழக்க செய்து வலியை குறைப்பது மற்றொரு வகை.துாக்கத்தை தரக்கூடிய இந்த மருந்தை, மது மற்றும் குளிர்பானத்துடன் இந்த மாத்திரையை போதைக்காக பலர் பயன்படுத்துகின்றனர். தொடர்ச்சியாக இவற்றை பயன்படுத்தினால், மூளை, சிறுநீரகம், இருதயம் உள்ளிட்டவை செயலிழந்து விடும்.ஆன்லைனில் இது போன்ற மருந்து, மாத்திரைகள் எளிதில் கிடைக்கின்றன. மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்து சீட்டு அடிப்படையில் தான் இது போன்ற மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும்.ஆனால், பழைய மருந்து சீட்டுகள் அடிப்படையில் கூட ஆன்லைனில் இது போன்ற மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. மருத்துவர்கள், இந்திய மருத்துவர் சங்கம் மற்றும் மருந்து விற்பனையாளர் சங்கம் சார்பிலும் இதுபோன்ற மருந்து - மாத்திரைகளை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.சமூகத்தை சீரழிக்கும் இது போன்ற மருந்து மாத்திரைகளின் ஆன்லைன் விற்பனைக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.