| ADDED : ஜூலை 17, 2024 01:22 AM
திருப்பூர்;மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவில்வழி பகுதிகளில் காய்ச்சல் கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் முகாம் நடத்தப்படுகிறது.திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில், டெங்கு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகள் மற்றும் அதிக காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதி களில், சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. நடமாடும் மருத்துவக்குழு மூலமாக, மருத்துவ முகாம் நடத்தி, காய்ச்சல், சளி, தலைவலி பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து, மருந்து, மாத்திரை வழங்கப்படுகிறது.இதன்வாயிலாக, காய்ச்சல் தொற்று பரவுவது தடுக்கப்படுகிறது. இந்நிலையில், கோவில் வழி சுற்றுப்பகுதிகளில், அடிக்கடி காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதால், 60 வது வார்டில் நேற்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. பழைய பிள்ளையார் நகர் கோவில் வீதியில், நடமாடும் மருத்துவக்குழுவினர் முகாம் நடத்தினர்.சுகாதார ஆய்வாளர் முகிலன் தலைமையிலான குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். டாக்டர் கலைச்செல்வன் தலைமையிலான மருத்துவ குழுவினர், பொதுமக்களை பரிசோதித்து, காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கினர். ஒரு நாளுக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு இருந்தால், உடனடியாக அருகே உள்ள சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வேண்டும்; உரிய பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.