திருப்பூர்:தொழில்துறையினர் சந்திக்கும் பிரச்னைகள், சவால்களுக்கு தீர்வு காணும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் புதிய தொழில்நுட்ப இயந்திரம் அறிமுகம் செய்யப்படுகிறது.அவ்வகையில், பின்னலாடை நிறுவனங்களில் பயன்படுத்த ஏதுவான, ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய தையல் மெஷின் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக விழாவில், திருப்பூர் சங்கத் மெஷின் நிர்வாக இயக்குனர் சேதுபதி வரவேற்றார். அவரது மனைவி சாந்தி, ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் இளங்கோவன், பொதுசெயலாளர் திருக்குமரன், துணை மேயர் பாலசுப்பிரமணியம், கே.எம்., நிட்வேர் செயல் இயக்குனர் கார்த்திக் பிரபு, காஸ்மோ டெக்ஸ் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் நவமணி ஆகியோர், குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.தொடர்ந்து, ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள, ஓவர்லாக் மெஷின் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, ஜேக் நிறுவன மார்க்கெட்டிங் பிரதிநிதி முரளிதாஸ், பிரதீப் ஆகியோர், புதிய மெஷினின் சிறப்புகளை, படக்காட்சிகளுடன் விளக்கினர். தொடர்ந்து, புதிய மெஷினில் நீளமான துணியை தைப்பதன் மூலமாக, ஒரு காரையே நகர்த்தும் அளவுக்கு திறன் உள்ளது என்பது விளக்கப்பட்டது.குறிப்பாக, ஒரு லட்சம் 'டேட்டா'க்களுடன், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் மெஷின் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், தைக்கப்படும் துணியின் தன்மைக்கு ஏற்ப, ஊசி மற்றும் தையல் நுால் தானியங்கி முறையில், தடையின்றி தைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது விளக்கப்பட்டது. திருப்பூர் சுற்றுப்பகுதியை சேர்ந்த தொழில் அமைப்பு நிர்வாகிகள், பனியன் நிறுவன உரிமையாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.------------------------------திருப்பூர் வேலன் மான்செஸ்டர் ஹாலில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 'ஓவர்லாக் மெஷின்' அறிமுக விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள்.