நுாலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டாலும், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றுள்ள, இந்திய ஹாக்கி அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஒரு காலத்தில் தேசிய விளையாட்டான ஹாக்கியில் தொடர்ந்து தங்கப்பதக்கமாக குவித்துவந்த இந்திய அணி, காலவோட்டத்தில், நிலைகுலைந்து, தற்போது மீண்டும் பிரகாசிக்கத் துவங்கியிருக்கிறது. இது, ஹாக்கி ஆர்வலர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வோம் என்ற எண்ணம் மேலோங்குகிறது. எடுபடாத தடுப்பு ஆட்டம்
அரையிறுதியில், ஜெர்மனியுடனான போட்டியில் இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை. துவக்கத்தில் சிறப்பாக திறமை காட்டிய நம் அணியினர், இறுதியில் தவறுகள் செய்து விடுகின்றனர். முதல் பத்து நிமிடம் நம்மிடம் இருந்த ஆட்டம், பின் கைநழுவியது. ஹர்மன்பீரித்சிங் ஆட்டத்தை கணித்து, எதிரணி விளையாடியது; நம் தடுப்பு ஆட்டம் எடுபடவில்லை.'பெனால்டி கார்னர்' வாய்ப்பை அம்ரித் ரோஹிதாசுக்கு வழங்கி அவர் பயன்படுத்தியிருந்தால், கூடுதலாக ஒரு கோல் அடித்திருக்க முடியும். இந்திய அணிக்கு, இன்னமும் கூடுதலாக வீரர்களை உருவாக்க, நாடு முழுதும், செயற்கை புல் தரை ஹாக்கி மைதானம் உருவாக்கப்பட்டு வருகிறது. இது, தமிழகத்தில் தொடர வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.- டாக்டர் செந்தில்குமரவேல்,உடற்கல்வி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி பெதப்பம்பட்டி. 'பினிஷிங்' ரொம்ப முக்கியம்
அரையிறுதியில் ஜெர்மனியுடனான போட்டியில், ஏழு 'பெனால்டி கார்னர்' வாங்கினோம். சரியாக பயன்படுத்தியிருந்தால், எளிதில் வெற்றி கிடைத்திருக்கும். கிடைத்த இரண்டு பெனால்டி கார்னரையும் கோலாக ஜெர்மனி வீரர்கள் மாற்றினர். நம் அணியிடம் பினிஷிங் சரியாக இருக்க வேண்டும். ஏனெனில், சரியான தருணத்தில் 'பெனால்டி கார்னர்', 'ட்ரக் பிளிக்' செய்வது அவசியம்.கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தான் இதில் ஸ்பெஷலிஸ்ட். அவரை தவிர, யாரும் இல்லாததால், தடுமாற்றம் ஏற்பட்டது. இருப்பினும், இந்திய அணி ஒலிம்பிக்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது; பெருமையாக உள்ளது. ஒவ்வொரு வீரரின் கடுமையான உழைப்பு தான் இதற்கு காரணம்.'ஹாக்கி இந்தியா' சங்கம், அதற்கு தகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. இந்த வெற்றி, வரும் நாட்களில் ஹாக்கி போட்டி வளர்ச்சி பெறும். அசத்தலாக விளையாடிய, கோல்கீப்பர் ஸ்ரீ ஜேஷ் தமிழகத்தில் பயிற்சி பெற்றவர். ஐ.ஓ.பி., வங்கி அணி வீரர்.- மோகன், செயலாளர், மாவட்ட ஹாக்கி சங்கம், தமிழக ஹாக்கி அணி முன்னாள் வீரர். தங்கம் வாங்கியது போன்ற உணர்வு
ஒலிம்பிக்கில், 1980ல் 'ஸ்டிக் ஒர்க்' அதிகமாக இருந்த போது, நாம் 'டாப'பில் இருந்தோம்; தங்கம் குவித்தோம். 'கிராஸ்', 'ஆப்சைடு' விதிமுறைகள் மாற்றப்பட்டது. ஜரோப்பியர்கள் அதிக உயரம் உள்ளவர்களாக உள்ளனர். போட்டி, ஓட்ட நேரம் வேகமெடுத்துள்ளதால், போட்டியில் ஓட்டமும் அதிகமாகி விட்டது. அவர்களால், எளிதில் ஓட முடிகிறது. நம்மவர்கள் உயரமாக இருந்த போதும், ஓட்டம் வேகமெடுக்காததால், இறுதி வரை போராட வேண்டியுள்ளது.மாவட்ட அளவில் துவங்கி, அடிப்படை நிலையில் இருந்து திறமையான வீரர்களை உருவாக்க புல்தரை மைதானம் வேண்டும். மண் தளத்தில் விளையாடி விட்டு தேசிய போட்டிக்கு சென்றால் சாதிக்க தடுமாற்றம் தான் ஏற்படும். இந்திய அணி பல சிக்கல்களை கடந்து, வெற்றி பெற்றது, பெருமையாக உள்ளது. தங்கம் வாங்கியதை போல் தான் உணர்கிறேன். அனைத்து மாநிலங்களிலும், பள்ளி அளவிலேயே புல்தளத்தில் விளையாடி பழகினால், ஒலிம்பிக்கில் தங்கம் பெறுவது சாத்தியமே!- ரமேஷ்பாபு, செயற்குழு உறுப்பினர், மாவட்ட ஹாக்கி சங்கம். புல்வெளி மைதானம்
1980களுக்கு பின், 2020ல் பெற்ற வெற்றியை தொடர்ந்து, தங்கம் வாங்கியே தீர வேண்டும் என்ற முயற்சி ஒலிம்பிக் துவக்கத்தில் இருந்தே தீராத பசியாக இருந்தது. நியூசிலாந்து போட்டி துவங்கி, ஆஸி., வரை அடுத்தடுத்து வெற்றி பெற்று, பிரிட்டனுடனான ஆட்டத்தில், அம்ரித் 'ரெட்கார்டு' வாங்கிய போதும், ஒன்பது வீரர்களுடன் வெற்றியை நோக்கி பயணித்தது பெருமை.நாடு முழுதும் செயற்கை புல்வெளி, ஹாக்கி மைதானம் கொண்டு வந்தால், அதிக திறனை வீரர்கள் பெறுவர். சாதித்தது உணர்ந்தாலும், தவறுகளை திருத்திக் கொள்ளவும் வேண்டும். பலம் வாய்ந்த, ஸ்பெயினுடன் போட்டி போடும் போது, ஆட்டம் முடியும் தருவாயில், 65 சதவீத வெற்றி வாய்ப்பு நமக்கே இருந்தது.சிறந்த வீரர்களை உருவாக்க எஸ்.டி.ஏ.டி., கல்லுாரி கல்வி இயக்கம், 'ஹாக்கி இந்தியா' தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. ஹாக்கி விளையாட இன்னமும் நிறைய வீரர்கள் வர வேண்டும். ஓய்வு அறிவித்த நிலையில், மிக சிறப்பாக விளையாடினார்,ஸ்ரீஜேஷ். ஹாக்கிக்கு என்று தனி விளையாட்டு விடுதி, கோவில்பட்டியில் உள்ளது. இலவச பயிற்சி வழங்குவதால், கூடுதலாக வீரர்கள் உருவாகின்றனர்.- ராஜராம், சிக்கண்ணா கல்லுாரிஹாக்கி அணி பயிற்சியாளர். வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்
இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றதற்காக அவர்களின் பெரிய அளவில் கடின உழைப்பும், உடல் மன உறுதியும், திட்டமிடுதலும் உள்ளது. அதனால், வெண்கலம் சாத்தியமாகியுள்ளது. ஒட்டு மொத்த அணியையும் பாராட்டி, பெரிய அளவில் வெகுமதி தர வேண்டும்.கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுப்பு ஆட்டம்; ஹர்மன்பிரீத் அபார கோல்கள் இந்தியா அணியின் வெற்றியை உறுதி செய்தது. பஞ்சாப், அரியானா, ஓடிசா வீரர்கள் அதிகமாக உள்ளனர். இந்திய ஹாக்கி அணியில், தமிழக வீரர்களுக்கு அதிகளவில் வர வேண்டும். அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும்.- நித்தியானந்தன், ஹாக்கி ரசிகர் செல்வபுரம், மண்ணரை.