நெல் வயல்களில் அசோலா வளர்ப்பு; தழைச்சத்துக்கு உதவும்
உடுமலை; தழைச்சத்தை அதிகரித்து, களையை கட்டுப்படுத்தும், 'அசோலா' வை, வயல்களில், விதைத்து பராமரிக்கும் முறையை அமராவதி ஆயக்கட்டு விவசாயிகள், பின்பற்ற துவங்கியுள்ளனர்.உடுமலை அமராவதி அணை, பழைய ஆயக்கட்டு பாசனத்தில், நெல் சாகுபடி பிரதானமாக உள்ளது. தொடர்ச்சியாக, வயலில், ஒரே வகையான சாகுபடியை மேற்கொள்வதால், மண் வளம் குறைந்து, மகசூல் பாதிக்கிறது.எனவே, மண் வளத்தை அதிகரித்து, நெல் சாகுபடியில், கூடுதல் மகசூல் பெற, வயலில், 'அசோலா' வை விதைத்து பராமரிக்கும் முறையை, அமராவதி ஆயக்கட்டு விவசாயிகள் பின்பற்ற துவங்கியுள்ளனர்.அசோலா எனப்படுவது, தண்ணீரில் தன்னிச்சையாக மிதந்து வளரும், 'பெரணி' வகை தாவரமாகும்.டெல்டா மாவட்டங்களில், அசோலாவை நெல் வயல்களில், தேங்கும் தண்ணீரில், வளர்த்து, மண் வளத்தை அதிகரிக்கின்றனர். எனவே, இம்முறை தற்போது இப்பகுதியிலும் பின்பற்றப்படுகிறது.விவசாயிகள் கூறியதாவது: ஏக்கருக்கு, 50 கிலோ வரை, அசோலா விதைகளை துாவுகிறோம். வயலில் தண்ணீர் தேக்கும் போது, இத்தாவரம், எளிதாக வளர்ந்து விடுகிறது.பின்னர், தாவரத்தை மட்க செய்து, உழவு செய்யும் போது, மண் வளம் அதிகரிக்கிறது. மேலும், சிலர், சீரிய நெல் சாகுபடி முறையில், நெற்பயிர்களுக்கு இடையே, ஊடுபயிராகவும், அசோலாவை பராமரிக்கின்றனர்.இதனால், களைகள் வளர்வது கட்டுப்படுகிறது; கோனோவீடர் கருவி வாயிலாக, களையெடுக்கும் போது, அசோலா செடிகள், தண்ணீரில், மூழ்கி, உயிர் உரமாக மாறுகிறது. இத்தாவரம், மண்ணுக்கு தழைச்சத்தை பெற்றுத்தருவதில், முக்கிய பங்கு வகிக்கிறது.இவ்வாறு, தெரிவித்தனர்.