திருப்பூர் : ஜி.எஸ்.டி., கவுன்சில் அறிவிப்புகள் மற்றும் நோட்டீஸ் மீதான மேல்முறையீடு தொடர்பான 'ஆன்லைன்' கருத்தரங்கு, இன்று நடக்கிறது.மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் ஓர் அங்கமாக இயங்கி வருகிறது, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,). ஏற்றுமதியாளர்களை ஊக்குவித்து, நாட்டின் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தை உயர்த்தும் வகையில் இயங்கி வருகிறது.ஜி.எஸ்.டி., கவுன்சில் (53வது கவுன்சில்) சமீபத்தில் கூடி ஆலோசித்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மேலும், ஜி.எஸ்.டி., நிலுவை அதிகம் இருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, ஏற்றுமதியாளர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.இந்நிலையில், ஏ.இ.பி.சி. மற்றும் ஏ.எக்ஸ்.என்., இன்போடெக்' நிறுவனம் சார்பில், 53வது ஜி.எஸ்.டி., கவுன்சில் அறிவிப்புகள் குறித்த ஆன்லைன் கருத்தரங்கு இன்று மாலை நடக்கிறது. வரி ஆலோசகர் கதிரவன், வணிக மேம்பாட்டுப்பிரிவு மேலாளர் கார்த்தீஸ்வரன் ஆகியோர், 'ஆன்லைன்' வாயிலாக விளக்க உள்ளனர். குறிப்பாக, ஜி.எஸ்.டி., நோட்டீஸ் மீதான பதில் நடவடிக்கை குறித்தும், எவ்வாறு சட்டரீதியாக மேல்முறையீடு செய்வது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கின்றனர்.இதுகுறித்து ஏ.இ.பி.சி., அதிகாரிகள் கூறுகையில், 'ஜி.எஸ்.டி., கவுன்சில் அறிவிப்பு மற்றும் நோட்டீஸ் மீதான மேல்முறையீடு குறித்த, 'ஆன்லைன்' கருத்தரங்கு, 19ம் தேதி மாலை, 3:30 முதல், மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. கூடுதல் விவரங்களுக்கு, 9677988788 என்ற எண்களில் அணுகலாம்,' என்றனர்.