உடுமலை:மடத்துக்குளம் வட்டாரத்தில் தக்காளி, வெங்காயம் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம், என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மடத்துக்குளம் தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ் குமார் கூறியதாவது:மடத்துக்குளம் வட்டாரத்தில், தக்காளி, சின்ன வெங்காயம் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.இப்பயிர்கள், இயற்கை இடர்பாடுகளால் சேதம் அடைந்தால், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பயிர் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் பயிர் கடன் பெறாத விவசாயிகள் சேரலாம்.உள்வட்ட அளவில் ஏற்படும் மகசூல் இழப்பு, விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்திற்கு, அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு, புயல், மழை, மண்சரிவு, வெள்ளம் போன்ற உள்ளூர் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் இழப்பீடுகளுக்கு, பயிர் காப்பீடு பெற முடியும்.கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் இ - சேவை மையங்களில், மடத்துக்குளம், துங்காவி ஆகிய குறு வட்டங்களை சேர்ந்த தக்காளி, வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயிர்க்காப்பீடு செய்து கொள்ளலாம்.காரீப் பருவ விவசாயிகள் பிரீமியம் தொகை செலுத்த, வரும் ஆக., 31 கடைசி நாளாகும். ராபி பருவ விவசாயிகள், ஜன., 2025க்குள் பிரீமியம் தொகை செலுத்தலாம்.காப்பீட்டு திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள், 95 சதவீதம் தொகையும், விவசாயிகள் பங்களிப்புத் தொகை, 5 சதவீதம் என, விவசாயிகள் வெங்காயம் பயிருக்கு, ஒரு ஏக்கருக்கு ரூ. 2,228ம், தக்காளி பயிருக்கு ஒரு ஏக்கருக்கு, ரூ.1,495 ம் பிரீமியம் செலுத்த வேண்டும்.பயிர்க் காப்பீடு செய்து முழுமையான பாதிப்பு ஏற்பட்டால், வெங்காயத்திற்கு, ஒரு ஏக்கருக்கு, ரூ. 44,550, தக்காளி பயிருக்கு, ஒரு ஏக்கருக்கு ரூ. 29,900ம் இழப்பீடு தொகையாக கிடைக்கும்.இத்திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் முன்மொழிவு படிவம், பதிவு விண்ணப்பம், அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கிப்புத்தக நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் மேற்கூறிய இடங்களில் காப்பீடு செய்து கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு, உதவி தோட்டக்கலை அலுவலர்,- தாமோதரன் 96598 38787 என்ற எண்ணிலும், தோட்டக்கலை அலுவலர் காவிய தீப்தினி, - 99521 47266 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.