உடுமலை;''உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில் ஏராளமான குளம், குட்டைகள் இருந்தும், ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம் காரணமாக பட்டியலில் விடுபட்டுள்ளது, ''என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.உடுமலையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் நடந்தது.இதில் விவசாயிகள் பேசியதாவது:உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில், நுாற்றுக்கணக்கான குளம், குட்டைகள் உள்ளன.ஆனால், நீர் நிலைகளை ஆழப்படுத்தும் வகையிலும், விளை நிலங்களை வளமாக்கும் வகையிலும், விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ளும் திட்டத்தில், ஒரு சில குட்டைகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.விவசாயிகளுக்கு அருகிலுள்ள குளம், குட்டைகளை துார்வாரினால், மழை நீர் சேகரிக்கப்பட்டு, நிலத்தடி நீர் மட்டம் உயரும்.விவசாயிகளும் செலவு குறைவாக, மண் எடுக்க முடியும். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்ட பட்டியலில், பெரும்பாலான நீர் நிலைகள் விடுபட்டுள்ளன.ஏற்கனவே, விவசாயிகள் சார்பில், உடுமலை ஒன்றிய அதிகாரிகளிடம், நீர் நிலைகளின் பட்டியல் வழங்கப்பட்டும், தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர் உத்தரவுகளை அலட்சியப்படுத்தியுள்ளனர்.எனவே, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, விடுபட்ட குளம், குட்டைகளில் மண் எடுக்க அனுமதியளிக்க வேண்டும்.இவ்வாறு பேசினர்.கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் பேசியதாவது:திருமூர்த்தி அணையில், 4 சர்வே எண்கள் குறிப்பிடப்பட்ட நிலையில், ஒரு சர்வே எண் மட்டும் இணைய தளத்தில் உள்ளது. மீதம் உள்ள சர்வே எண்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.170 விவசாயிகளுக்கு மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டுதல் அடிப்படையில், முன்னுரிமை, பதிவு வரிசை அடிப்படையில், விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.தற்போது, அனுமதியளிக்கப்பட்ட நீர் நிலைகளில், குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை வைத்து, இ - சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பித்தால், உடனடியாக அனுமதி வழங்கப்படும்.விடுபட்ட குளம், குட்டைகள் குறித்தும், தங்களுக்கு தேவையான நீர் நிலைகள் குறித்து விவசாயிகள் பட்டியல் வழங்கினால், உரிய முறையில் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டு, அனுமதி வழங்கப்படும்.இவ்வாறு, தெரிவித்தார்.