| ADDED : மே 17, 2024 11:54 PM
பல்லடம்;மின் இணைப்பு கொடுக்காததால், கடை திறக்க முடியவில்லை. ஆனாலும், வாடகை கட்டணுமா? என, பல்லடத்தில், வியாபாரிகள் புலம்பி வருகின்றனர்.பல்லடம் பஸ் ஸ்டாண்ட் அருகே, நகராட்சிக்கு உட்பட்ட வணிக வளாகத்தில், 48 கடைகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு விட தயாராகி வருகின்றன. இருப்பினும், மின் இணைப்பு வழங்கப்படாமல், கடைகளே இன்னும் திறக்கப்படாத நிலையில், வாடகை செலுத்த வேண்டும் என, நகராட்சி கூறுவதால் வியாபாரிகள் புலம்பி வருகின்றனர்.இது குறித்து வியாபாரிகள் சிலர் கூறியதாவது:தினசரி மார்க்கெட் பகுதியில், ஏற்கனவே, 32 கடைகள் இருந்தன. இவற்றை அகற்றிவிட்டு, புதிதாக, 48 கடைகள் கட்டப்பட்டன. ஏற்கனவே இருந்த கடைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை முன்பணம் செலுத்தியுள்ளோம். தற்போது, புதிதாக கட்டப்பட்ட கடைகளை ஏலம் எடுத்த நிலையில், இதற்கும் ஒரு லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.பழைய கடைகளுக்கு செலுத்திய முன் பணம் திருப்பி வழங்கப்படவில்லை. இதற்குள், புதிய கடைகளுக்கு கட்டுமாறு கூறுவதுடன், ஒரு ஆண்டுக்கான வாடகை தொகையையும் செலுத்த வேண்டும் என்கின்றனர். தமிழக அரசு அறிவித்த கொரோனா கால வாடகை தள்ளுபடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை.இதுதவிர, புதிய கடைகளுக்கு இன்னும் மின் இணைப்பே வழங்கப்படவில்லை; கடைகள் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கும் வரவில்லை. பழைய கடைகளுக்கு செலுத்தப்பட்ட முன் பணத்தை திருப்பி கொடுக்காமல், புதிய கடைகளுக்கு முன் பணம் செலுத்த சொல்வதுடன், ஓராண்டு வாடகையையும் கட்டுமாறு கூறுவதால் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.