திருப்பூர் : கணியாம்பூண்டியில் உள்ள ஐ.எம்.ஏ., கட்டடம், விரிவுபடுத்தப்பட்டு, பொலிவூட்டப்பட்டுள்ள நிலையில், வரும், 14ம் தேதி திறப்பு விழா காண்கிறது.திருப்பூர், கணியாம்பூண்டியில் கடந்த, இந்திய மருத்துவ சங்க( ஐ.எம்.ஏ.,) கட்டடம் செயல்படுகிறது. இக்கட்டடம் விரிவுபடுத்தப்பட்டு, 'திருப்பூர் ஐ.எம்.ஏ., டாக்டர் முருகநாதன் ஆடிட்டோரியம்' என்ற பெயரில், நவீன வசதி நிறைந்த மண்டபமாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, வரும், 14ம் தேதி, மாலை, 3:00 மணிக்கு நடக்கிறது.தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உறுப்பினர் டாக்டர் முருகநாதன், தலைமை வகிக்கிறார். ஐ.எம்.ஏ., தேசிய தலைவர் டாக்டர் அசோகன், மாநில தலைவர் அபுல் ஹசன் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். கலெக்டர் கிறிஸ்துராஜ், அரசு மருத்துவக்கல்லுாரி டீன் முருகேசன், ஐ.எம்.ஏ., மாநில பொருளாளர் கார்த்திக் பிரபு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.ஏற்பாடுகளை திருப்பூர் ஐ.எம்.ஏ., தலைவர் டாக்டர் பாண்டியராஜன், செயலாளர் டாக்டர் ஆனந்த் உள்ளிட்ட இன்னாள், முன்னாள் நிர்வாகிகள் பலர் செய்து வருகின்றனர்.திருப்பூர் ஐ.எம்.ஏ., துணைத் தலைவர் டாக்டர் செந்தில்குமார் கூறுகையில், ''திருப்பூர், ஐ.எம்.ஏ.,வில், 900 மருத்துவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சமையல் அறை, டைனிங் ஹால், வாகன பார்க்கிங் வசதி என, அனைத்து வசதிகளை உள்ளடக்கிய மண்டபமாக ஐ.எம்.ஏ., கட்டடம் உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவத்தின் அடுத்தடுத்த வளர்ச்சி குறித்த 'அப்டேட்' தகவல்களை மருத்துவர்கள் பரிமாறிக் கொள்ள, ஆலோசனை செய்து கொள்ள இக்கட்டடத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். சங்கப்பணிகள், மருத்துவ முகாம் உள்ளிட்ட வழக்கமான செயல்பாடுகளுடன், மண்டபம் வாடகைக்கும் விடப்படும்'' என்றார்.--திருப்பூர், கணியாம்பூண்டியில் புதுப்பொலிவுடன் கூடிய ஐ.எம்.ஏ., கட்டடம், வரும் 14ம் தேதி திறக்கப்பட உள்ளது.
முன்னாள் தலைவருக்கு கவுரவம்
திருப்பூர் ஐ.எம்.ஏ., துணைத்தலைவர் டாக்டர் செந்தில்குமார் கூறுகையில், ''மாநில அளவில், 'சிறப்பான செயல்பாடு' என்ற அடிப்படையில் திருப்பூர் ஐ.எம்.ஏ., கடந்த மூன்றாண்டாக, முதலிடத்தில் இருந்து வருகிறது. கடந்த, 2003ல், ஐ.எம்.ஏ., மாநில தலைவராக டாக்டர் முருகநாதன் பதவி வகித்த போது, திருப்பூரில் ஐ.எம்.ஏ., மாநாடு நடத்தினார். திருப்பூர் ஐ.எம்.ஏ.,வுக்கு கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்தது துவங்கி, நிலம் வாங்கி, கட்டுமானப்பணி மேற்கொண்டது வரையிலான பணிகளுக்கு முன்னோடியாக இருந்துள்ளார். தொடர்ந்து, சங்க செயல்பாடு, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். அவரை கவுரவப்படுத்தும் வகையில் ஆடிட்டோரியத்துக்கு அவரது பெயர் வைத்துள்ளோம்,'' என்றார்.---